திருவாலங்காடு, ஜன. 26--
எல்.வி.புரம்
 கொசஸ்தலையாற்றில் தடுப்பணை அமைக்கும் பணி எப்போது துவங்கும். தடுப்பணை 
அமைக்கப்பட்டால் கூடுதலாக 1,000 ஏக்கரில் விவசாயம் செய்ய முடியும். எனவே 
விரைந்து தடுப்பணை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் 
எதிர்பார்க்கின்றனர்.ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீர், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே, கொசஸ்தலை ஆற்றில் கலந்து பின், திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், வழியாக பாய்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடையும். பாசன வசதி
ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் கொசஸ்தலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரி நிரம்பியதும் நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இந்த நீரை சேமித்தால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.இந்நிலையில் திருவாலங்காடு ஒன்றியத்தில் பாகசாலை அல்லது எல்.வி.புரம் கொசஸ்தலைஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள், 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து 2020ல் திருத்தணி நீர்வளத் துறை பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் எல்.வி.புரம் கொசஸ்தலையாற்றில் இடம் தேர்வு செய்து மண் பரிசோதனை செய்தனர். பின் இங்கு, 230 மீ. நீளம், 2 மீ. உயரத்திற்கு, 20 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்க அரசுக்கு திட்டமதிப்பீட்டை அனுப்பி வைத்தனர். இதன் வாயிலாக, 50 லட்சம் லிட்டர் நீர் சேமிக்க முடியும். ஆயிரம் ஏக்கர் நிலம்
ஆனால் இதுவரை அரசு சார்பில், இந்த திட்டத்திற்கு எந்தவித பதிலும் இல்லாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.பாகசாலை விவசாயி சம்பத் கூறியதாவது:தற்போது எல்.வி.புரம், பாகசாலை, ஓரத்துார், களாம்பாக்கம் உட்பட 11 கிராமங்களில் 6,000 ஏக்கரில் மூன்று போகம் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த தடுப்பணை அமைந்தால் இந்த பகுதிகளில் தரிசாக உள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்தில் கூடுதலாக பயிர் செய்ய முடியும்.இந்த பகுதிகளில் விவசாயம் மட்டுமே பிரதான தொழில் எனவே விளைநிலங்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். தற்போது 50 சதவீத விவசாயிகள் ஆழ்துளை போர் அமைத்துள்ளனர்.இதனால் நிலத்தடி நீர்மட்டம் அடிமட்டத்திற்கு சென்று விட்டது. ஏரி, ஆறு பாசனத்தை நம்பி இருக்கும் மற்ற விவசாயிகளுக்கு அறுவடை காலத்தில் நீர் கிடைக்காமல் பணம் கொடுத்து நீர் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.இந்த தடுப்பணை அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கோடைகாலத்திலும் விவசாய நிலங்களுக்கு நீர் கிடைக்கும். விவசாயிகள் பயன் பெறும் திட்டம் மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தடுப்பணை கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கப்பட உள்ளது. அனுமதி வந்ததும் பணிகள் துவங்கும் என, திருத்தணி நீர்வளத்துறை பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.