| ADDED : டிச 01, 2025 04:04 AM
திருத்தணி: சுடுகாட்டில் வளர்ந்துள்ள செடிகளை முறையாக அகற்றாமல், மேதினாபுரம் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. இதனால், இறுதி சடங்கிற்கு செல்லும் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது மேதினாபுரம் கிராமம். இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், திருத்தணி அரசு கலைக் கல்லுாரி பின்புறம் உள்ள 2 ஏக்கரை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2013 - 14ம் ஆண்டு 'தாய்' திட்டத்தின் கீழ், ஊராட்சி நிர்வாகம் மேதினாபுரம் சுடுகாட்டில் எரிமேடை, ஆழ்துளை கிணறு மற்றும் சுற்றுசுவர் அமைத்தது. மூன்று ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம் சுடுகாட்டை முறையாக பராமரிக்காததால், தற்போது சுற்றுசுவர் சேதமடைந்தும், எரிமேடை மற்றும் சுடுகாடு முழுதும் முட்செடிகள் வளர்ந்துள்ளன. தற்போதும், இந்த சுடுகாட்டில் தான் இறந்தவர்களின் உடல்களை புதைத்தும், எரித்தும் வருகின்றனர். அதிகளவில் முட்செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் அதிகளவில் உலா வருகின்றன. இதனால், மக்கள் அச்சத்தில் இறுதி சடங்கில் பங்கேற்று வருகின்றனர். எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டை பராமரிக்க உத்தரவிட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.