உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கண்களை மறைத்த பனி, போகி புகை மூட்டம் விபத்துகளில் மாணவர்கள் உட்பட 3 பேர் பலி

கண்களை மறைத்த பனி, போகி புகை மூட்டம் விபத்துகளில் மாணவர்கள் உட்பட 3 பேர் பலி

சென்னையில், நேற்று அதிகாலை முதல் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகை கொண்டாடியதாலும், மார்கழி மாதத்தின் நிறைவு நாள் பனி அதிகளவில் பொழிந்ததாலும் அடர் இருட்டானது. கண்களை மறைத்த புகை மூட்டத்தால், வெவ்வேறு இடங்களில் விபத்துகள் நடந்தன. இதில், மூன்று பேர் உயிரிழந்தனர்; 7 பேர் படுகாயமடைந்தனர்.புழல், கண்ணப்பசாமி நகர் 16வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன், 19; கல்லுாரி மாணவர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் வசந்தகுமார், 20, கண்ணன், 20, ஆகியோருடன், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் 'போகி' பண்டிகை கொண்டாடினர்.அதன்பின், காவாங்கரை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், சாலையை கடக்க முயன்றவர்கள் மீது, புழலில் இருந்து செங்குன்றத்திற்கு சென்ற சரக்கு லாரி மோதியது. இதில், கார்த்தீஸ்வரன், வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த கண்ணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் புகை மூட்டத்தால் விபத்து நடந்ததாக தெரியவந்தது; லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

பள்ளி மாணவன் பலி

கும்மிடிப்பூண்டி, கண்ணம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அஸ்வந்த், 14; ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவரது நண்பர் அரவிந்த், 12; ஏழாம் வகுப்பு மாணவர். இருவரும், நேற்று காலை டூ- - வீலரில், காரூரில் இருந்து கண்ணம்பாக்கம் நோக்கி சென்றனர். கண்ணம்பாக்கம் கிராம எல்லையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம், கடுமையான பனி மூட்டத்தால் இவர்களது கண்ணுக்கு புலப்படவில்லை.

5 பேர் படுகாயம்

அதன் மீது மோதியதில், டூ - வீலரை ஓட்டி வந்த அஸ்வந்த், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை - --திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி, நர்ணமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே, இரு சக்கர வாகனத்தில் இளநீர் கட்டி வந்தவர் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, கோயம்பேடில் இருந்து திருத்தணிக்கு பழங்கள் ஏற்றி வந்த சரக்கு வேன், இரு சக்கர வாகனம் மீது மோதியது. மேலும், எதிரே வந்த சரக்கு ஆட்டோவின் மீதும் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.விபத்தில், சரக்கு வேனில் வந்த திருத்தணி கே.ஜி.கண்டிகை சேர்ந்த தெய்வானை, 30, வள்ளியம்மா, 40, ஓட்டுனர் சூர்யா, 32, இரு சக்கர வாகனத்தில் வந்த பாபு, 39, ஆட்டோ ஓட்டுனர் சிங்கரய்யா, 44, என ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு

ஆந்திராவில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக பூக்கள் ஏற்றி வேன் வந்தது. மதுரவாயல் அருகே, புகை மூட்டத்தால் சாலை சரியாக தெரியாமல் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்ததால், வேன் சாலை நடுவே கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால், ஒரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

50 விமான சேவைகள் பாதிப்பு

பனி மற்றும் புகை மூட்டத்ததால் சிங்கப்பூர், லண்டன் மற்றும் டில்லியில் இருந்து வந்து, சென்னையில் தரையிறங்க வேண்டிய நான்கு விமானங்கள் ஹைதராபாத்துக்கு அனுப்பப்பட்டன. அதேபோல், மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஹைதராபாத், கோல்கட்டா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து வர வேண்டிய 20 விமானங்கள், சென்னைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டில்லி, அந்தமான், துாத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 புறப்பாடு விமானங்களும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான விமான பயணியர் பாதிக்கப்பட்டனர்.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nandakumar Naidu
ஜன 15, 2024 11:38

0 ...


அப்புசாமி
ஜன 15, 2024 11:29

தன்வினை தன்னைச் சுடும். வூட்டிலே போகி கொளுத்திட்டு கெளம்பினாங்க. போகி.புகையே போட்டுத் தள்ளிடிச்சு.


M S RAGHUNATHAN
ஜன 15, 2024 11:08

15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இருவர் இரு சக்ரம் வாகனம் ஓட்டியதில் ஒரு விபத்து ஏற்பட்டு இரு சிறுவர்களும் மரணம். இந்த சட்ட விரோத செயலுக்கு துணை போன பெற்றோர் மீத் கொலைக் குற்றம் சாட்டி தண்டிக்க வேண்டும்.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 15, 2024 04:45

தினமலர் கூட ஹிந்து பண்டிகை மீது பழிபோட்டு அரம்பித்துவிட்டார்களா? எந்த ஊரில் இரவு இரண்டு மணிக்கு போகி கொண்டாடுகிறார்கள்? அதுவும் மாணவர்களும், எவனோ குடித்துவிட்டு எதையோ ராத்திரி எரித்தால் அது கூட ஹிந்துக்களின் தப்பா ? ஒன்பதாம் வகுப்பு மாணவருக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கொடுத்தது யாருடைய தவறு? அதற்க்கு கூட போகி தான் காரணமா? தமிழகம் எங்கே போகிறது?


மேலும் செய்திகள்