தனியார் நிறுவன வாகனங்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகாவில், தனியார் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொது பயன்பாட்டு பேருந்துகள் நிலையம் மற்றும் நிறுத்தங்களில் மட்டும் நின்று, பயணியரை ஏற்றி செல்கின்றன.ஆனால், தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் தனியார் நிறுவன பேருந்துகள், ஒவ்வொரு ஊரிலும் தெருவுக்கு தெரு நடுரோட்டிலேயே நின்று, மாணவர்கள் மற்றும் பணியாளர்களை ஏற்றி செல்கின்றன. நடுரோட்டில் நிறுத்தப்படும் பேருந்துகளின் ஓட்டுனர்கள், எந்தவித சிக்னலும் காண்பிப்பது இல்லை.திடீரென நடுரோட்டில் நிறுத்தப்படும் பெரும்பாலான பேருந்துகளில் எச்சரிக்கை சிக்னல் விளக்குகளும் எரிவது இல்லை. இதனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.திருத்தணி வட்டார போக்குவரத்து ஆய்வாளர், பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேருந்துகளின் ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.