உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்வரத்து கால்வாய் சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

நீர்வரத்து கால்வாய் சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

திருத்தணி, ஏ ரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை சீரமைக்காமல், திருத்தணி நீர்வளத்துறையினர் அலட்சியம் காட்டுவதால், நந்தியாற்றில் தண்ணீர் வீணாகி வருகிறது. திருத்தணி ஒன்றியம் தலையாரிதாங்கல் ஏரி, 75 ஏக்கர் உடையது. இந்த ஏரியில் தண்ணீர் இருந்தால் தாடூர், எல்.என்.கண்டிகை, தலையாரிதாங்கல், வீரகநல்லுார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீரும். மேலும், 350க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். செருக்கனுார் பெரிய ஏரி நிரம்பி, அங்கிருந்து சித்தேரிக்கு வரும். பின், அங்கிருந்து வெளியேறும் உபரிநீர், தலையாறிதாங்கல் ஏரிக்கு வரும். கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த மழையால், செருக்கனுார் பெரிய ஏரி நிரம்பியது. செருக்கனுார் சித்தேரி செல்லும் 100 மீட்டர் நீளமுள்ள கால்வாயை, நீர்வளத்துறையினர் முறையாக பராமரிக்காததால், முட்செடிகள் வளர்ந்து, ஆங்காங்கே கால்வாய் புதைந்துள்ளன. இதனால், செருக்கனுார் பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் வீணாகி நந்தியாற்றில் கலக்கிறது. இதனால், செருக்கனுார் சித்தேரி, தலையாரிதாங்கல் ஏரி மற்றும் வீரகநல்லுார் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதுகுறித்து, திருத்தணி நீர்வளத்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தலையாரிதாங்கல், வீரகநல்லுார் மற்றும் செருக்கனுார் சித்தேரியில் போதிய தண்ணீர் இல்லை. குறிப்பாக தலையாரிதாங்கல் ஏரி தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. எனவே, கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை