அங்கன்வாடி மையம் அருகே திறந்த நிலை கால்வாய்
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கேசவராஜகுப்பம் கிராமத்தில், 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் பிரதான சாலையில், அரசு தொடக்க பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. அங்கன்வாடி மையம் நுழைவாயிலை ஒட்டி, கழிவுநீர் கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாய் திறந்தநிலையில் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. கழிவுநீர் வெளியேற தடை ஏற்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பள்ளி மாணவர்களும், அங்கன்வாடி குழந்தைகளும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்கள், திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழும் நிலை உள்ளது. இதனால், பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கால்வாயை துார் வாரி சீரமைக்கவும், கால்வாய்க்கு மேல்தளம் அமைக்கவும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.