| ADDED : ஜன 19, 2024 01:36 AM
சென்னை:அம்பத்துார் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகிறது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு:அம்பத்துார் ஆவின் பால் பண்ணையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஓரளவு மட்டுமே செயல்படுவதாக ஒப்புக் கொண்டுள்ள ஆவின் நிறுவனம், 'ஜனவரி இறுதிக்குள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என தெரிவித்துள்ளது.ஆனால், ஆவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தற்போதுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பித்து அங்கு உருவாகும் கழிவுகளை கையாள இன்னும் 4 - 5 மாதங்களாகும். சோழிங்கநல்லூர் ஆவின் பிரிவுக்கு கழிவுநீர் கொண்டுச் செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது' என்றார். அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் மீண்டும் ஆய்வு செய்து, கழிவுநீர் எவ்வாறு அகற்றப்படுகிறது; குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 35 கி.மீ., தொலைவுக்கு கழிவுநீரை கொண்டுச் செல்வது சாத்தியம்தானா என்பதையும் ஆராய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை பிப்., 12க்கு தள்ளி வைத்தனர்.