பழவேற்காடில் மீன்பிடி துறைமுக திட்டம்...கிடப்பில்!:இடம் தேர்வு செய்வதில் தொடரும் குழப்பம்
பழவேற்காடு:பழவேற்காடில் கிடப்பில் போடப்பட்ட மீன்பிடி துறைமுகம் திட்டத்தை மீனவர்கள் ஆலோசனையுடன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ பகுதியில் கூனங்குப்பம், அரங்கம், லைட்அவுஸ்குப்பம் உள்ளிட்ட 15 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.இதற்காக, இப்பகுதியில், 1,600 பைபர் படகுகள் உள்ளன. இவற்றின் உதவியுடன் கடலில், 10 நாட்டிகல் மைல் தொலைவு வரை சென்று, மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் வகையில், விசைப்படகுகள் நிறுத்துவதற்காக, மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.இதற்காக, 2022ல் சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையின்போது, 'பழவேற்காடில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பழவேற்காடில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பான முதல்கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீனவ கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம், ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.மீன்வளத்துறை அதிகாரிகளும், மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.மீன்பிடி துறைமுகம் அரங்கம்குப்பம் கிராமத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.அரங்கம்குப்பம் பகுதியில் துறைமுகம் அமைந்தால், வடக்கு பகுதியில் உள்ள நடுகுப்பம், லைட்அவுஸ்குப்பம், திருமலைநகர், செம்பாசிபள்ளி, கூனங்குப்பம் ஆகிய மீனவ கிராமங்கள், கடல் அரிப்பால் பாதிக்கப்படும் எனவும், மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் என, அதிகாரிகளிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.மேலும், அனைத்து மீனவ கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகளின் கூட்டத்திலும், மீனவர்கள் ஒருமித்த கருத்தாக, 'ஆய்வு செய்யப்பட்ட இடம் மீன்பிடி துறைமுகம் அமைவதற்கு ஏற்ற இடம் இல்லை எனவும், இதனால் வடக்கு பகுதி மீனவ கிராமங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும்' எனவும் தெரிவித்தனர்.பழவேற்காடில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான இடம் தேர்வு எதுவும் முடிவு செய்யப்படவில்லை எனவும், அனைத்து மீனவ கிராமங்களுக்கும் பொதுவான, பாதிப்பு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும் என்பது தான் அரசின் திட்டம் என, அதிகாரிகள் மீனவர்களுக்கு உறுதியளித்தனர்.மேலும், பழவேற்காடில் மீன்பிடி துறைமுகம் அமையும் திட்டமானது, ஆய்வு மற்றும் ஆலோசனைகளுடன் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், அதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் இல்லை.இதனால், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளனர். இது, மீனவர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைந்தால், கடல் அரிப்பால் மீனவ கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என, மாற்று இடமும் தெரிவித்தோம். அதன்பின்னும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.மீன்பிடி துறைமுகம் அமைவதால், விசைப்படகுகள் உதவியுடன் கடலில் நீண்டதுாரம் சென்று மீன்பிடித்து வரமுடியும். இதனால், பழவேற்காடு பகுதிக்கு மீன்வரத்து அதிகரிக்கும்.அதன் வாயிலாக சிறு வியாபாரிகள், ஏற்றுமதி செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும்.மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், பல்வேறு தரப்பினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிக்க உதவும். மீனவ கிராமங்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.