மீண்டும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பூங்கா இடங்கள்? கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டுகோள்
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 450க்கும் மேற்ப்டட தெருக்கள் உள்ளன. நகராட்சியில் தற்போது, 75,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த வார்டுகளில், புதிதாக உருவான குடியிருப்பு பகுதிகளில், பொது ஒதுக்கீட்டு இடங்களான பூங்கா, சிறுவர் விளையாடும் இடம் மற்றும் திறந்தவெளி பகுதிகள் ஆகியவை ஒதுக்கப்பட்டு, நகராட்சிக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடங்களை, நகராட்சி நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. 120 பூங்கா இடங்கள்
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெயா நகர், வி.எம்.நகர், ராஜாஜிபுரம், என்.ஜி.ஓ., காலனி, எம்.ஜி.எம்., நகர், ஜவஹர் நகர், விக்னேஷ்வரா நகர், ஐ.சி.எம்.ஆர்., பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில், 120 இடங்களில், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ளன.பெரியகுப்பம் - வி.எம்.நகர், அய்யனார் அவென்யூ, ஜெயா நகர் பிரதான சாலை உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். ஆக்கிரமிப்புக்குள்ளான, பூங்கா இடங்களை நகராட்சி நிர்வாகம் கடந்த சில ஆண்டுக்கு முன் மீட்டது.நகராட்சி முழுதும், 120 இடங்களில் பூங்கா இடங்கள் இருந்தாலும், என்.ஜி.ஜி.ஓ., காலனி, எம்.ஜி.எம்., நகர், வைஷ்ணவி நகர், வரதராஜ நகர், பாரதியார் நகர், ஏ.எஸ்.பி., நகர் மற்றும் பத்மாவதி நகர் ஆகிய ஏழு இடங்களில் மட்டுமே, பூங்கா கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்த நிலையில், 16வது வார்டுக்கு உட்பட்ட அய்யனார் அவென்யூ பகுதியில், 42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.நகராட்சிக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட 120 இடங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கம்பி வேலி அமைக்கப்பட்டு, 'இது நகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடம். ஆக்கிரமிப்பு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டிருந்தது.தற்போது, அந்த இடங்களில் உள்ள கம்பி வேலி அனைத்தும் சேதமடைந்து விட்டன. மேலும், எச்சரிக்கை பலகையும் மாயமாகியது. இதனால், நகராட்சி பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த நகராட்சி கூட்டத்தில், 12வது வார்டு சுயே., உறுப்பினர் ராஜ்குமார் கூறியதாவது:திருவள்ளூர் நகராட்சி முழுதும் ஒப்படைப்பு செய்யப்பட்ட பூங்கா இடத்தில் அமைக்கப்பட்ட இரும்பு கம்பி வேலிகள் சேதமடைந்து விட்டன. இதனால், அந்த இடங்கள் மீண்டும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மிக சிரமப்பட்டு தான். அந்த இடங்கள் மீட்கப்பட்ட நிலையில், மீண்டும் அதுபோன்ற நிலை வந்து விடக்கூடாது. எனவே, பூங்கா இடங்கள் அனைத்திலும், சுற்றுச்சுவர் அமைத்து, பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இரும்பு வேலி
அதேபோல் சமூக ஆர்வலர்களும், நகராட்சியில் மீதமுள்ள பகுதிகளிலும், வார்டுக்கு ஒன்று வீதம் பூங்கா அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து நகராட்சி தலைவர் பா.உதயமலர் கூறியதாவது:திருவள்ளூர் நகராட்சியில் தற்போது ஏழு பூங்கா செயல்பாட்டில் உள்ள நிலையில், புதிதாக அய்யனார் அவென்யூவில் மற்றொரு பூங்காவும் கட்டும் பணி நடந்து வருகிறது. மேலும், ஒன்றாவது வார்டு உட்பட இரண்டு இடங்களில் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளோம்.இதுதவிர, நகராட்சிக்கு பூங்கா அமைக்க ஒப்படைப்பு செய்யப்பட்ட இடங்களை பாதுகாக்க, நிதி வசதிக்கு ஏற்ப சுற்றுச்சுவர் அல்லது இரும்பு வேலி மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், திருவள்ளூர் நகரில் இடம் இருந்தாலும், நகராட்சியில் நிலவும் நிதி தட்டுப்பாடு காரணமாக, மேலும் புதிய பூங்கா அமைத்து பராமரிக்க இயலவில்லை.'நமக்கு நாமே திட்டம்' அல்லது தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் நகராட்சி நிர்வாகத்துடன் கைகோர்த்து, பராமரிக்க முன்வரலாம். அவர்களுக்கு, தேவையான உதவியை நகராட்சி நிர்வாகம் வழங்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.