உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இருளில் ஆரம்ப சுகாதார நிலையம் அச்சத்தில் நோயாளிகள்

இருளில் ஆரம்ப சுகாதார நிலையம் அச்சத்தில் நோயாளிகள்

திருவாலங்காடு:திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் நான்கு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இங்கு, சின்னம்மாபேட்டை, வீரராகவபுரம், மணவூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். அதேபோல, விபத்தில் சிறு காயமடைந்தவர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என, 10க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில், இந்த வளாகத்தில் நான்கு ஆண்டுகளாக மின் விளக்குகள் பொருத்தப்படாததால், இரவு நேரங்களில் வளாகம் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. இதனால் இரவில் சிகிச்சைக்காக வருவோர் மற்றும் ஏற்கனவே சிகிச்சையில் இருப்போர் அவரது உறவினர்கள் பெண்கள் இரவில் வந்து செல்ல அச்சமாக உள்ளது என, தெரிவிக்கின்றனர்.மேலும், இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் இந்த வளாகத்தில் மது அருந்துவதும், மருத்துவம் பார்க்க வரும் பெண்கள், ஆண்களை வீணாக வம்புக்கு இழுப்பதாகவும் புலம்புகின்றனர்.எனவே, ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கவும், இருளில் இருந்து காக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விரைவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை