நிலமெடுக்க அனுமதி: தேர்தல் வருவதால் தமிழக அரசு தயக்கம் பரனுார் - திண்டிவனம் சாலை விரிவாக்க திட்டத்தில் சிக்கல்
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், பரனுார் - திண்டிவனம் ஆறு வழிச்சாலை விரிவாக்க திட்ட நில எடுப்பு பணிக்கு அனுமதி தர, தமிழக அரசு தயங்குகிறது. இதனால், மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியை பயன்படுத்த முடியாத நிலைக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தள்ளப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி, மறைமலைநகர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள், நாளுக்கு நாள் அதிகளவில் வளர்ச்சியடைந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை பல்வேறு மாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அலுவல் மற்றும் தொழில் காரணமாக இப்பகுதிகளில் குடிபெயர்ந்துள்ளனர். கல்வி காரணமாகவும் மாணவ, மாணவிகள் தங்கியுள்ளனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இது, ஜி.எஸ்.டி., சாலை எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. இச்சாலை வழியாக பயணியர் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்தும் அதிகம் நடந்து வருகிறது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில், பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால், ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிங்கபெருமாள் கோவில், பரனுார், இருங்குன்றம்பள்ளி, மாமண்டூர், சுங்கத்துறை, மேலவளம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், நெரிசலில் சிக்கி வாகனங்கள் திணறுகின்றன. பரனுார் சுங்கச்சாவடியை கடந்து, தென் மாவட்டங்களுக்கு செல்வதற்குள் பண்டிகை மற்றும் விடுமுறை நாள் முடிந்துவிடுவதாக பலரும் வேதனைபடுகின்றனர். இந்த சாலையை, பரனுார் முதல் திண்டிவனம் வரை, 68.2 கி.மீ.,க்கு ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியது. இதையேற்று, விரிவான திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாரித்துள்ளது. அதன்படி, இப் பணிக்கு, 1,988 கோடி ரூபாய் தேவைப்படும் என தெரியவந்துள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சாலை பணிக்கு விவசாய பட்டா நிலங்கள் மற்றும் அரசு துறை நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. ஆலோசனை கூட்டம் நில எடுப்பு பணிகளை முடித்தால் மட்டுமே, சாலை விரிவாக்க பணியை துவங்க முடியும். அதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை. இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு, மாநில அரசு அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள், தமிழக அரசின் தலைமை செயலர் ஆகியோர் மட்டத்திலான ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும். ஆலோசனை கூட்டத்துக்கு அனுமதி வழங்காமல், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், பரனுார்-திண்டிவனம் ஆறு வழிச்சாலை பணியை துவங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. கோரிக்கை ம த்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியை பயன் படுத்தி, ஜனவரி மாதம் பணிகளை துவங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பரனுார் - திண்டிவனம் ஆறு வழிச்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, நத்தம் பச்சையம்மன் கோவில் அருகே உள்ள பாலாற்று பாலம் புதிதாக கட்டப்பட உள்ளது. பிலாப்பூர், மெய்யூர், சிறுபினாயூர், புக்கத்துறை வழியாக மேல்மருத்துவத்துார் வரை, 10.5 கி.மீ.,க்கு புறவழிச்சாலையும் அமைக்கப்பட உள்ளது. இதன்வாயிலாக நெரிசல் கணிசமாக குறையும். இந்த சா லை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தார். அவர் ஒப்புதலும் வழங்கிவிட்டார். அதிகாரிகள் மட்டத்திலான ஒப்புதல் நிலுவையில் உள்ளது. இப்பணிக்கு விவசாய நிலங்களையும் கையகப்படுத்த வேண்டியுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இந்த விஷயத்தில் மாநில அரசுதான் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். காலத்தே பயிர் செய் என்பது போல, கிடைக்கும்போதே வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். புறவழிச்சாலை அமையும் கிராமங்கள் கிராமங்கள் துாரம் (மீட்டர்) நத்தம் 650 பிலாப்பூர் 2,100 மெய்யூர் 3,300 சிறுபினாயூர் 3,320 புக்கத்துறை 800 பழமத்துார் 480 *- நமது நிருபர் -