மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 532 மனுக்கள் ஏற்பு
13-May-2025
திருவள்ளூர், புன்னப்பாக்கம் ஏரியில் சவுடு மண் எடுப்பதற்கு தடை விதிக்க கோரி, கலெக்டரிடம் கிராமவாசிகள் மனு அளித்தனர்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக 120; சமூக பாதுகாப்பு திட்டம் சம்பந்தமாக 68; வேலைவாய்ப்பு வேண்டி 65; பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 35 இதர துறை 95 என 383 மனுக்கள் அளித்தனர்.மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து புன்னப்பாக்கம் கிராமவாசிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:திருவள்ளூர் ஒன்றியம், புன்னப்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி, ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள மூன்று மதகுகள் வழியாக ஏரி நீர் வெளியேற்றப்பட்டு, குறு, சிறு விவசாய நிலத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சில நாட்களாக ஏரியில் இருந்து லாரிகள் மூலம் சவுடு மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரியில் மழைநீர் சேகரமாகாமல், விவசாய பணிகள் பாதிக்கும் நிலை நிலவுகிறது என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.இருப்பினும், தொடர்ந்து சவுடு மண் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் நலன் கருதி, புன்னப்பாக்கம் ஏரியில் சவுடு மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.குத்தம்பாக்கம் கிராமவாசிகள் அளித்துள்ள மனு:குத்தம்பாக்கம், இருளபாளையம் அருகில் தனியார் 'லே அவுட்' அமைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்திற்கு அருகில், நேமம் ஏரியில் இருந்து மழை காலத்தில் உபரி நீர் வெளியேறும் கால்வாய் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் மழை காலத்தில், அந்த கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும். தற்போது, அந்த கால்வாயை ஒட்டி தனியார் வீட்டு மனை விற்பதற்கான பணி நடைபெற்று வருவதால், வரும் மழை காலத்தில் விவசாய நிலமும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளான, இருளபாளையம், பர்வதராஜபுரம், உட்கோட்டை, வெள்ளவேடு நரசிங்கபுரம், சமத்துவபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும். எனவே, நேமம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாயை 5,000 கன அடி நீர் வெளியேற்றும் வகையில் அகலப்படுத்த வேண்டும்.வேளகாபுரம் கிராமவாசிகள் அளித்துள்ள மனு:ஊத்துக்கோட்டை வட்டம், வேளகாபுரம் ஊராட்சியில், விநாயகர் கோவில் தெரு எதிரில் சுடுகாடு ஒன்று பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், அதே கிராமத்தில், முனீஸ்வரர் கோவில் அருகில் மற்றொரு சுடுகாடு அமைப்பது குறித்து, கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது முனீஸ்வரன் கோவில் அருகில் சுடுகாடு அமைவதற்கான பணி நடக்கிறது. இதனால் பிரச்னை ஏற்படும். எனவே, அங்கு சுடுகாடு அமைக்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
13-May-2025