கும்மிடிப்பூண்டி : மின் பற்றாக்குறையால் தவித்து வரும், 30 கிராமங்களின் நலன் கருதி, பூவலம்பேடு அருகே, ஒதுக்கிய இடத்தில், துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.பஞ்செட்டி துணை மின் நிலையத்தின் கீழ், கவரைப்பேட்டை அடுத்த பூவலம்பேடு மின் பொறியாளர் அலுவலகம், இயங்கி வருகிறது. அங்கிருந்து, குருவராஜகண்டிகை, பில்லாக்குப்பம், பாத்தப்பாளையம், தேர்வாய், கரடிபுத்துார் உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.கிராம பகுதிகளில், மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக, மின் பற்றாக்குறை ஏற்பட்டு, குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.அதனால், கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னை குறித்து, பல முறை பூவலம்பேடு மற்றும் பஞ்செட்டி மின் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அதன்படி பூவலம்பேடு கிராமத்தில் துணை மின் நிலையம் அமைப்பது என, வடசென்னை மின் பகிர்மான வட்டம் சார்பில், முடிவு எடுக்கப்பட்டது.அதற்காக, பூவலம்பேடு அருகில் உள்ள அமிர்தமங்களம் கிராமத்தில், ஒதுக்கிய நிலத்தில், துணை மின் நிலைய திட்ட பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட மின் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'திட்ட மதிப்பீடு செய்து சென்னையில் உள்ள கட்டுமான பிரிவுக்கு அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கியதும் பணிகள் துவங்கப்படும்' என தெரிவித்தார்.