திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் பறிமுதல் மணல் குவியலால் இடையூறு
திருத்தணி:திருத்தணி தாலுகாவில் செல்லும் நந்தியாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில், சிலர் அரசு அனுமதியின்றி, மாட்டு வண்டி, சரக்கு ஆட்டோ, டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் மணல் எடுத்து விற்பனை செய்து வந்தனர்.இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர், மணல் கடத்துபவர்களை கண்டறிந்து வாகனங்கள் பறிமுதல் செய்தும், மணலை திருத்தணி தாசில்தார் அலுவலக வளாகத்தில் கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆறு மாதமாக பறிமுதல் செய்யப்பட்டு வரும் மணல் தாலுகா அலுவலக வளாகத்தில் மலைப்போல் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அலுவலகத்திற்கு வரும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர்.இதுதவிர, மணல் கொட்டப்பட்டுள்ள இடத்தில் குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்களும் நிறுத்தியுள்ளதால் பெரும்பாலான வாகனங்கள் மண்ணில் புதைந்து வீணாகி வருகிறது. எனவே, மணலை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.இது குறித்து திருத்தணி தாசில்தார் மலர்விழி, கூறுகையில், 'அலுவலக வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள மணலை பொது ஏலம் விடுவதற்கு பொதுப்பணித்துறையினர் அளவீடு செய்து தருமாறு மூன்று முறை பரிந்துரை கடிதம் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் மணல் ஏலம் விடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது' என்றார்