மாணவியிடம் சீண்டல் அதிகாரிக்கு போக்சோ
மதுரவாயல்:பேருந்தில் பயணித்த கல்லுாரி மாணவியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மத்திய அரசு வேளாண் துறை அதிகாரியை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோடம்பாக்கத்தை சேர்ந்தவர், 17 வயது இளம்பெண். இவர், கோடம்பாக்கத்தில் உள்ள கல்லுாரியில் பயின்று வருகிறார். இவரது உறவினர் திருமணத்திற்காக, காஞ்சிபுரம் சென்று, நேற்று முன்தினம் மதியம் அரசு பேருந்தில் சென்னை திரும்பினார். மதுரவாயல் எம்.ஜி.ஆர்., பல்கலை அருகே பேருந்து வந்தபோது, துாங்கிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவியிடம், பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சுதாரித்த மாணவி, அந்த நபரை அடித்ததுடன், பேருந்து ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தார். ஓட்டுநர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர், திருச்சியை சேர்ந்த ராகேஷ், 26, என்பதும், மத்திய வேளாண் துறையில், உரம் விற்பனை அதிகாரியாக பணி செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, விருகம்பாக்கம் மகளிர் போலீசார், ராகேஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.