விவசாய நிலங்களில் திருட்டு பொன்னேரி விவசாயிகள் புகார்
பொன்னேரி, பொன்னேரி அடுத்த மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, அரவாக்கம், ஆசானபூதுார், மத்ராவேடு ஆகிய கிராமங்களில், விவசாய நிலங்களில் ஆழ்துளை மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளன.கடந்த இரு நாட்களாக இக்கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில், ஆழ்துளை மோட்டார்களுக்கு செல்லும் கேபிள்களை துண்டித்து மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தற்போது வரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மோட்டார் காப்பர் மின் ஒயர்கள் திருடு போயுள்ளன.பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் ஒயர்கள் திருடியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, நேற்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:ஆழ்துளை மோட்டார்களுக்கு செல்லும் மின் ஒயர்கள் காப்பரால் ஆனது. இவற்றை உருக்கி விற்பனை செய்வதற்கே திருடி உள்ளனர். தற்போது, ஆழ்துளை மோட்டார்கள் செயலிழந்து உள்ளதால், விவசாய பணிகள் பாதித்துள்ளன.ஆழ்துளை மோட்டார்களை வெளியில் எடுத்து தான், புதிதாக கேபிள் இணைப்பு வழங்க முடியும். இதனால், ஒவ்வொரு விவசாயிக்கும், 10,000 - 15,000 ரூபாய் வரை செலவு ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து, மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.