குண்டும் குழியுமான சாலைகள் வேண்பாக்கத்தினர் அதிருப்தி
பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட, 27வது வார்டு பகுதியில் வேண்பாக்கம், சின்னவேண்பாக்கம், நேதாஜி நகர், ஆலாடு சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன.கடந்த, 2022ல், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு அரைகுறையாக மூடப்பட்டன. வடகிழக்கு பருவமழையின் காரணமாக சேதம் அடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கி, சகதியாக மாறி இருக்கிறது.குடியிருப்புவாசிகள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் தினமும் சிரமத்துடன் பயணிக்கின்றனர். சாலைகள் சேதம் அடைந்து இருப்பது குறித்து தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் பயனில்லை. குடியிருப்புவாசிகள் அவ்வப்போது, செங்கற்கள், சவுடு மண்ணை கொட்டி வருகின்றனர்.நகராட்சியில் மற்ற வார்டுகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்த தெருக்களில் புதிய சாலைகள் போடப்பட்டு உள்ள நிலையில், 27வது வார்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக குடியிருப்புவாசிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:நகராட்சிக்கு உட்பட்ட இந்த வார்டு கவுன்சிலர் அ.தி.மு.க,வைச் சேர்ந்தவர் என்பதால், நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு, இந்த பகுதியை புறக்கணிக்கிறது. வேண்பாக்கம் பஜார் பகுதியில் இருந்து சின்னவேண்பாக்கம் வழியாக, ஆலாடு செல்லும் சாலையில் உள்ள குழிகளில் வாகன ஓட்டிகள், 'எட்டுபோட்டு' தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.இரவு நேரங்களில் பள்ளங்களில் விழுந்து விபத்துக்களிலும் சிக்குகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.