முதன்மை கல்வி அலுவலக சாலையில் திரியும் நாய்களால் ஊழியர்கள் அவதி
திருவள்ளூர்: முதன்மை கல்வி அலுவலக சாலையில் சுற்றித்திரியும் நாய்களால், ஊழியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆரம்ப கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில், 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் உள்ள ஆரம்ப, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பல்வேறு பணிகளுக்காக இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இதன் அருகிலேயே தோட்டக்கலை துறை, ஆவின் கூட்டுறவு மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரி உள்ளிட்ட அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த அலுவலகம் மற்றும் கல்லுாரிக்கு, ஊழியர்கள், மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் வந்து செல்கின்றனர். கல்வி அலுவலகம் அமைந்துள்ள சாலையில், ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவ்வப்போது, ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால், அலுவலகங்களுக்கு வருவோர் கடும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என, ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.