நரிக்குறவர்கள் இடம் ஆக்கிரமிப்பு கண்டித்து போராட்டம்
சோழவரம்:சோழவரம் அடுத்த ஒரக்காடு அருகே அல்லிமேடு கிராமத்தில், நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில், 45 ஏக்கர் நிலத்தை, கடந்த, 1967 ல் அரசு தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.காலப்போக்கில் வாழ்வாதாரத்திற்காக நரிக்குறவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இந்நிலையில் தங்களுக்கு அரசு தானமாக வழங்கிய நிலத்தை தனிநபர்கள் சிலர் தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளதை அறிந்தனர். இது குறித்து பொன்னேரி வருவாய்த்துறையினரிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.இந்நிலையில் தனிநபர்கள் தங்களுக்கு சொந்தமான இடம் எனக்கூறி, அங்கு சுற்று சுவர் அமைக்கும் பணியை நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.இதற்கு நரிக்குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டதில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டினர். இதனால் நரிக்குறவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சு நடத்தினர். அதையடுத்து தற்காலிகமாக கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. நரிக்குறவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.