கவரைப்பேட்டை பஜார் பகுதி சிப்காட்டில் மழைநீர் தேக்கம்
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை பஜார் பகுதியில், மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியிருப்பதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில், கவரைப்பேட்டை பஜார் பகுதி அமைந்துள்ளது. பஜாரின் மைய பகுதி தாழ்வாக இருப்பதால், சிறு மழை பெய்தாலும், மழைநீர் தேங்கிவிடும். இப்பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால், இரு நாட்களாக பெய்து வரும் மழையால், மேற்கண்ட இடத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. பஜார் பகுதியில் உள்ள கடைளுக்கு வரும் பகுதி மக்களும், அப்பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரிதமாக செயல்பட்டு, கவரைப்பேட்டை பஜார் பகுதியில் மழைநீர் சீராக வெளியேறும் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். l அதேபோல், இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால், சிப்காட் வளாகத்தில் தாழ்வாக உள்ள பகுதிகளில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. குறிப்பாக, சிப்காட் வளாகத்தில் உள்ள நான்காவது குறுக்கு சாலை மற்றும் அதன் கிளை சாலைகளில், குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கடும் சிரமத்துடன் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்றி, மழைநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கான வழிகளை கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.