இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டடம்
திருத்தணி: சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்து, செடிகள் வளர்ந்துள்ளதால், பொருட்களை அச்சத்துடன் மக்கள் வாங்கி செல்கின்றனர். திருத்தணி ஒன்றியம் சீனிவாசபுரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ரேஷன் கடை கட்டடம், 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கடையில், 835 ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். கட்டடத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தற்போது கட்டடம் பழுதடைந்தும், சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் அடிக்கடி கடைக்குள் புகுந்து விடுகின்றன. சில நேரத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கும் போது, திடீரென பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வந்து விடுவதால், ரேஷன் கார்டுதாரர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். ரேஷன் கடை சுற்றியும் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, பழுதடைந்த கட்டடத்தை சீரமைக்க நடடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம சபையில் மனு அளித்தும் பயனில்லை. எனவே, கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, ரேஷன் கடை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிதாக கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.