திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பஸ் இயக்க கோரிக்கை
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்து செல்கின்றனர். இதில், பெரும்பாலான பக்தர்கள் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில்கள் வாயிலாக, திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.கடந்த இரு மாதங்களாக பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் சார்பில், அரசு பேருந்து ஒன்று ரயில் நிலையத்தில் இருந்து, முருகன் மலைக்கோவிலுக்கு இலவசமாக பக்தர்களை ஏற்றிச் சென்றும், தரிசனம் முடிந்ததும், மீண்டும் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தும் விடுகிறது.இந்த இலவச பேருந்து, கிருத்திகை மற்றும் வார விடுமுறை நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள நாட்கள் இலவச பேருந்து ரயில் நிலையத்தில் மலைக்கோவிலுக்கு இயக்கப்படாததால், ரயில் வாயிலாக வரும் பக்தர்கள், அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.அதாவது, ரயில் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு, குறைந்தபட்சம், 200 - 350 ரூபாய் வரை ஆட்டோ கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, இலவச பேருந்து வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயக்க வேண்டும்.குறிப்பாக, வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களிலாவது, ரயில் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு இலவச பேருந்து இயக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.