கூடுதல் வங்கி திறக்க கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தமிழகத்தின் கடைக்கோடி பகுதியாக ஆரம்பாக்கம் உள்ளது. அதை சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமவாசிகள், அன்றாட தேவைகளுக்கு வந்து செல்லும் முக்கிய பஜார் பகுதியாக ஆரம்பாக்கம் உள்ளது.தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் ஆரம்பாக்கத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியாக ‛பேங்க் ஆப் இந்தியா' கிளை மட்டுமே இயங்கி வருகிறது.ஒரு வங்கி மட்டுமே இருப்பதால், வியாபாரிகள், மகளிர் குழுவினர், மாணவர்கள், ஓய்வூதியம் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவோர் உட்பட, ஏராளமான வாடிக்கையார்களுடன் வங்கி நிரம்பி வழிகிறது.இதனால், காத்திருப்புக்கும், அலைக்கழிப்புக்கும் கிராமவாசிகள் ஆளாகி வங்கி சேவையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.ஆரம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களின் நலன் கருதி, ஆரம்பாக்கம் பஜார் பகுதியில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையை, கூடுதலாக திறக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.