தண்டுரை மார்க்கெட் பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த கோரிக்கை
ஆவடி:ஆவடி அடுத்த பட்டாபிராம் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் விதமாக, கடந்த 2002ல் மேம்பாலம் அமைக்க, கோரிக்கை வைத்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.இதையடுத்து, கடந்த 2010ல், மத்திய - மாநில அரசு நிதியில், மேற்கூறிய பகுதிகளை இணைக்கும் விதமாக பட்டாபிராம் - தண்டுரை மேம்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு வந்தது.தண்டுரை பகுதியில் மார்க்கெட் வசதி இல்லாததால், சாலையோர வியாபாரிகள், மேம்பாலத்தை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து கொண்டனர். ஆவடி நகராட்சி அதிகாரிகள் அவற்றை கண்டுகொள்ளாததால், மேம்பாலத்தின் கீழ் பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டது.தண்டுரை மீன் சந்தைக்கு வரும் வாகனங்கள், பார்க்கிங் வசதி இல்லாமல், அணுகு சாலையில் வாகனங்களை நிறுத்தினர். இதனால், அணுகு சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சென்று வர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் அணுகு சாலையில் நடந்து செல்ல முடியாதபடி, இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மற்ற நாட்களில், வேலைக்கு செல்வோர் அணுகு சாலையில் அத்துமீறி வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல், அணுகு சாலையோரம் 20க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன.எனவே, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், சாலையோர கடைகளை முறையாக கணக்கெடுத்து, பயன்படாமல் உள்ள கடைகளை அகற்றி, பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.