கஞ்சா கடத்திய இருவருக்கு காப்பு
திருத்தணி:ஒடிசா மாநிலத்தில் இருந்து, கஞ்சா, ஆந்திர மாநிலம் விஜயவாடா - திருப்பதிக்கு வரும் விரைவு ரயில்களில் கடத்தப்பட்டு வருகிறது. திருப்பதியில் பேருந்து, கார், மற்றும் இருசக்கர வாகனங்கள் வாயிலாக, தமிழக எல்லையான திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடி வழியாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தி சென்று விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், திருப்பதியில் இருந்து, பேருந்து வாயிலாக சென்னைக்கு கஞ்சா கடத்தி வருவதாக, திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீநிவாசபெருமாளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை, தனிப்படை எஸ்.ஐ., பார்த்திபன் தலைமையிலான போலீசார், பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை நடத்தினர்.அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக சென்னை நோக்கி செல்லும், அரசு பேருந்து, தடம் எண்:201 என்ற பேருந்தை தனிப்படை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது இரு பயணியரிடம், பையில் மறைத்து வைத்திருந்த, 5,700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தி வந்த சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன், 28, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கத்திரிபுலம் கிராமத்தைச் சேர்ந்த திலீபன், 28, ஆகிய இருவரை பிடித்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட இருவர் மீதும், வழக்கு பதிந்து கைது செய்தனர்.