சாலையில் தேங்கும் நீரால் பாலவாக்கம் பகுதியினர் அவதி
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆங்காங்கே மரண பள்ளங்கள், சாலை ஓரங்களில் அடுத்தடுத்த பள்ளங்கள் என வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.நேற்று முன்தினம் விடியற்காலை, 5:00 மணி முதல், 10:00 மணி வரை பலத்த மழை பெய்தது. ஊத்துக்கோட்டை, தாராட்சி, லட்சிவாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது.இதில் பாலவாக்கம் பகுதியில் சாலை தேங்கிய மழைநீரால் பாதசாரிகள் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள் எங்கு பள்ளம் உள்ளதோ, அதில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பயணம் செய்ய வேண்டிய உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் சாலையில் உள்ள மரண பள்ளங்களை சீரமைத்து தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.