தாமரைப்பாக்கம், அணைக்கட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தாழ்வான இடங்களில் குளம்போல் தேங்கியது. மறுமலர்ச்சி நகர் பகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்தது. தொடர் மழை காரணமாக வீடுகளில் புகுந்த மழை நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர் மழையால், ஆரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 'டிட்வா' புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று பள்ளி, கல்லுாரிகளுக்கு மாவட்டம் நிர்வாகம் விடுமுறை அளித்தது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. மேலும், பகலில், அவ்வப்போது விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர், சாலையில் குளமாக தேங்கியது. கும்மிடிப்பூண்டி பகுதியில் தொடர் கனமழையால், தாமரை ஏரியில் தேங்கி இருந்த தொழிற்சாலைகளின் கழிவுநீர் நிரம்பி வழிந்து, ஜி.என்.டி., சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், குரு கிருபா நகர், சாய் பாபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் சூழ்ந்து, மக்கள் வெளியே வர முடியாமல் நான்கு நாட்களாக முடங்கி உள்ளனர். ஜி.என்.டி., சாலையில், ரெட்டம்பேடு சந்திப்பு முதல் பிரித்வி நகர் வரையிலான, இரண்டு கி.மீ., துாரம் கழிவுநீர் தேங்கி இருப்பதால், நகர் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகள், தொடர் மழைக்கு சேதமானது. சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை கடந்து செல்லும், அதிக பார சரக்கு லாரிகளின் அச்சு முறிந்து பழுதாகி நிற்கின்றன. சிப்காட் வளாகத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி, சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால், தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு இடையே வேலைக்கு சென்று வருகின்றனர். எளாவூர் எழு கண் பாலத்திற்கும், கும்புளி கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதி முழுதும் வெள்ளக்காடானது. இடைப்பட்ட சாலையும் மூழ்கியதால், கும்புளி, ஏடூர், கொண்டமா நல்லுார் உள்ளிட்ட ஐந்து கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, தாமரைப்பாக்கத்தில் 11.6 செ.மீ., மழை பதிவாகியது. மாவட்டத்தில், எட்டு குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. 4 ஆடுகள், ஒரு காளை மாடு மற்றும், 2,148 கோழிகள் பலியாகி உள்ளன. தாமரைப்பாக்கம், அணைக்கட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தாழ்வான இடங்களில் குளம்போல் தேங்கியது. மறுமலர்ச்சி நகர் பகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்தது. இதனால் குழந்தைகளுடன் மக்கள் இரவு முழுதும் உறக்கமின்றி விழித்திருந்தனர். நேற்று காலை வரை அதிகாரிகள் யாரும் வராததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தாமரைப்பாக்கம் - வெங்கல் சாலையில், கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. வெங்கல் போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்தி, தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதில் சமாதானம் அடைந்த மக்கள் மறியலை கைவிட்டனர். பிச்சாட்டூர் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரால் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். இதனால் ஆரணி ஆற்றின் கரையோரம் உள்ள சிட்ரபாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், புதுப்பாளையம், மங்களம், ஆரணி உள்ளிட்ட கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழையளவு: இடம்- செ.மீ., தாமரைப்பாக்கம் 11.6 செங்குன்றம்- 9.6 பொன்னேரி- 9.4 கும்மிடிப்பூண்டி- 9.0 சோழவரம்- 9.0 ஊத்துக்கோட்டை- 8.1 ஆவடி- 7.2 திருவள்ளூர்- 6.0 பூண்டி- 4.7 பூந்தமல்லி- 4.3 திருவாலங்காடு- 4.3 பள்ளிப்பட்டு- 3.6 ஜமீன் கொரட்டூர்- 3.0
பிச்சாட்டூர் ஏரியில்
800 கன அடி நீர் திறப்பு
ஆந்திராவில் ஆரணி ஆற்றின் நடுவே உள்ள பிச்சாட்டூர், வடகிழக்கு பருவமழையால் ஏரிக்கு நீர்வத்து ஏற்பட்டது. இதனால் அதன் நீர்மட்டம், 'கிடுகிடு'வென உயர்ந்தது. தொடர் நீர்வரத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வப்போது மதகுகள் வழியே உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் புயல் மழையால், பிச்சாட்டூர் ஏரிக்கு வினாடிக்கு, 1,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, ஏரியில், 1.698 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 29.90 அடி மழை பெய்வதால் ஏற்படும் நீர்வரத்தால் ஏரி முழுதும் நிரம்பும் நிலை ஏற்பட்டது. இதனால் நேற்று, அங்குள்ள நான்கு மதகுகளில், இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு, 800 கன அடி வீதம் திறக்கப்பட்டது.
பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு
திருத்தணி தாலுகா, சத்திரஞ்ஜெயபுரம், மேதினிபுரம், பட்டாபிராமபுரம் உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் பூ செடிகள் பயிரிட்டுள்ளன. இவர்கள் தினமும் பூந்தோட்டத்தில் பூக்கள் பறித்து, திருத்தணி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் பூக்களை பறிக்க முடியாமல், செடியிலேயே அழுகி விடுகின்றன. மழையால் பூக்கள் மார்க்கெட்டிற்கு குறைவாக வருவதால், பூக்கள் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. மல்லி பூ கடந்த மூன்று நாட்களுக்கு முன் வரை ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரு கிலோ மல்லிப்பூ, 1,800- 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல், முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, கேந்தி போன்ற பூக்கள் நேற்று கார்த்திகை தீபம் ஒட்டி இரு மடங்காக விலை ஏற்றி விற்பனை செய்யப்பட்டது.- நமது நிருபர் குழு-: