திருவொற்றியூர்:திருவொற்றியூரில், 200 கோடி ரூபாய் மதிப்பீடில் அமைக்கப்பட்டு வரும் சூரை மீன்பிடி துறைமுகத்தில், அலை தடுப்பு சுவரின் நீளத்தை அதிகப்படுத்தாவிடில், கடலலை உட்புகுந்து பெருத்த சேதங்களை ஏற்படுத்தும் என, மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை, காசிமேடில் 1980ல் 570 படகுகளை கையாளும் விதமாக, மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது. பின், 2,000 படகுகளை கையாளும் விதமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனாலும், இடப்பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருந்தது.இதற்கு தீர்வாக, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது திருவொற்றியூர் குப்பத்தில், 200 கோடி ரூபாய் செலவில், சூரை மீன்பிடித் துறைமுகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டன.மீன்பிடித் துறைமுகம் பகுதியில் கடல் அலை உட்புகாமல் இருக்க, தென்கிழக்கு அலையை தடுக்கும் விதமாக, 2,801 அடி துாரமும், வடகிழக்கு அலையை தடுக்கும் விதமாக, 1,815 அடி துாரமும், பாறாங்கற்கள், கான்கிரீட் நட்சத்திர கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. அதன் மீது, கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.அதேபோல், 1,815 அடி துாரத்தில் பல பிரிவுகளாக, பெரிய மற்றும் சிறிய படகுகள் அணையும் தளங்கள், ஓய்வறை, மீன்கள் ஏலக்கூடம் உட்பட பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.இந்த சூரை மீன்பிடித் துறைமுகத்தின் பணிகள் முடியும்பட்சத்தில், 300 சிறிய படகுகள்; 500 பெரிய படகுகள் என, 800க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்த முடியும். ஆண்டுக்கு 60,000 டன் மீன்கள் கையாள முடியும்.குறிப்பாக, காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில், இடப்பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், தடுப்பு சுவர்கள் இணையும் பகுதியில், தென்கிழக்கு தடுப்பு சுவர் நீளம் குறைவு காரணமாக, துறைமுகத்தின் உட்புறம் தெற்கு பக்கத்தில் இருந்து அலை நேரடியாக உட்புகுகிறது. புயல், சூறாவளி, அதிகனமழையின் போது, அலையின் சீற்றத்தால் தெற்கு பக்கம் நிறுத்தியிருக்கும் படகுகள் மற்றும் வலைகள் சேதமாகும் சூழல் உள்ளது.இதன் காரணமாக, துறைமுகம் அமைத்தும் பயனில்லாமல் போய்விடும் என, மீனவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.இது குறித்து, மீன்வளத்துறை அதிகாரி கூறுகையில், 'திருவொற்றியூர் குப்பம், சூரை மீன்பிடி துறைமுகம் பணிகள், பிப்ரவரி இறுதியில் முடியும். தற்போது, துறைமுக வளாகத்தில் ஆழப்படுத்தும் பணி நடக்கிறது. அத்துடன் தென்கிழக்கு அலை தடுப்பு சுவரை, கூடுதலாக 330 அடி துாரம் நீட்டிப்பது குறித்து, பரிசீலனையில் உள்ளது. நிதி ஆதாரங்கள் தெளிவான பின், பணிகள் துவங்கும்,'' என்றார்.பயனுள்ளதாக்குவது எப்படி?
துறைமுகத்தின் உள்ளே வடக்கு பக்கம் படகுகள் நிறுத்த ஏதுவாக கடல் அலையின்றி குளம் போல் காட்சியளித்தாலும், தெற்கு பக்கம் நேரடியாக அலை உட்புகுவதால், படகுகள் நிறுத்த முடியாது. கடந்த மாதம் வீசிய 'மிக்ஜாம்' புயலின்போது, தெற்கு புறம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் துாக்கி வீசப்பட்டு, கற்கள் மீது விழுந்து சேதமடைந்தன. எனவே, தென்கிழக்கு அலை தடுப்பு சுவரை கூடுதலாக 330 அடி துாரம் நீடித்தால் மட்டுமே, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சூரை மீன்பிடி துறைமுகம் பயனுள்ளதாக அமையும்.தேசப்பன், மீனவர், திருவொற்றியூர் குப்பம்