உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மனுக்களை கிடப்பில் போடுவதா? அதிகாரிகள் மீது அமைச்சர் ஆவேசம்

மனுக்களை கிடப்பில் போடுவதா? அதிகாரிகள் மீது அமைச்சர் ஆவேசம்

செங்கல்பட்டு, : ''பொதுமக்களின் மனுக்கள் மீது, அரசு துறைகளின் அதிகாரிகள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவது சரியல்ல. இனிமேலும் அப்படி இருக்காமல், உடனடியாக தீர்வு காண வேண்டும்,'' என, அமைச்சர் அன்பரசன், அதிகாரிகளை எச்சரித்தார்.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மனுக்கள் பெற்றார். இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி, பேருந்து வசதி, பட்டா திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 406 மனுக்கள் பெறப்பட்டன. அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:குருவட்ட அளவில், வருவாய், உள்ளாட்சி துறைக்கு ஏராளமான மனுக்கள் வருகின்றன. இவற்றின் மீது, அதிகாரிகள் கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போட்டுவிடுவதாக குற்றச்சாட்டு வருகிறது. பொதுமக்களின் மனுக்களுக்கு, உடனடி தீர்வுகாண வேண்டும். தீர்வுகாண முடியாத மனுக்களுக்கு, உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும்.மேல் நிலை நீர்தேக்க தொட்டிகள், 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து, குளோரின் போடுவதில்லை; குறித்த நேரத்தில் குடிநீர் வினியோகிப்பதில்லை என்றும் புகார்கள் வருகின்றன. இதுபோன்ற புகார்கள் வராத வகையில், அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். வீட்டுமனை அங்கீகாரம், வீட்டு வரி வசூலிப்பில் மட்டும், ஊராட்சி செயலர்கள் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது; மற்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். சரியாக பணியாற்றாதவர்களை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.நிகழ்ச்சியில், கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, கூடுதல் கலெக்டர் அனாமிகா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை