தடப்பெரும்பாக்கத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்... கிடப்பில் : 5,000 குடியிருப்புகளில் வெளியேறும் கழிவுகளால் சீர்கேடு
பொன்னேரி: தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், 5,000 குடியிருப்புகளில் இருந்து தினமும் வெளியேறும் கழிவுகளை முறையாக கையாள்வதற்கான திடக்கழிவு மேலாண்மை திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், அவை சாலையோரங்களில் குவிந்து துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், 5,000 குடியிருப்புகள் உள்ளன. ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியாக இருக்கிறது. குடியிருப்புகளில் இருந்து தினமும், 12,000 கிலோ குப்பை வெளியேற்றப்படுகிறது. குடியிருப்பு வாசிகள், வீட்டில் இருக்கும் கழிவுகளை தெருக்களின் ஓரங்களில் கொட்டி குவிக்கின்றனர். இவை அன்றாடம் அகற்றப்படுவதில்லை. கழிவுகளில் இருந்து துர் நாற்றம் வீசுகிறது. தெருக்களில் குவியும் இவற்றை ஊராட்சி நிர்வாகம், 3-4 நாட்களுக்கு ஒரு முறை டிராக்டர்களில் சேகரித்து, மக்கும், மட்காதவை என தரம்பிரிக்காமல் ஆரணி ஆறு, தடப்பெரும்பாக்கம் ஏரி என நீர்நிலைகளிலும், காலிமனைகளிலும் கொட்டி குவித்து, எரிக்கிறது. இதனால் நீர்நிலைகளும், சுற்றுசூழலும் மாசடைகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், குப்பை கழிவுகளை கையாள்வதற்காக, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த, 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தேவையான இடவசதியை தேர்ந்தெடுத்து திட்டம் செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் ஓராண்டிற்கு பின், நிதி திரும்ப பெறப்பட்டது. திடக்கழிவு மேலாண் மை திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் தரம் பிரிக்காமல் நீர்நிலைகளில் கொட்டப்படுவதும் தொடர்கிறது. போராட்டம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், 13 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே நிரந்தம், மற்றவர்கள் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர். நிரந்த பணியாளர்களுக்கு, 9,200 ரூபாய், தற்காலிக பணியாளர்களுக்கு, 5,000 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. குறைந்த ஊதியம், நாள்முழுதும் பணி என்பதால் அவர்கள் பணிச்சுமையால் தவிக்கின்றனர். இந்நிலையில் துாய்மை பணியாளர்கள் குறைந்த ஊதியத்தால், குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாகவும், ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் எனவும் மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதிகாரிகளிடம் இருந்து, அலட்சிய பதிலே கிடைத்ததால் விரக்தி அடைந்தனர். அதையடுத்து, நேற்று துாய்மை பணிகளை புறக்கணித்தனர். காலை, 6:00 முதல், சாலையோரத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். பகல், 12:00 மணிவரை அதிகாரிகள் யாரும் வராத நிலையில் அவர்கள் விரக்தி அடைந்தனர். அதிகாரிகள், கலெக்டர் அலுவலக கூட்டத்திற்கு சென்றதாக கூறப்பட்டது. அதையடுத்து துாய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர். சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திடக்கழிவு மேலாண் மை திட்டத்திற்கு தேவையான இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை. போதிய பணியாளர்கள் இல்லை. இருப்பவர்களும் குறைந்த சம்பளம் பெறுகின்றனர். அவர்களுக்கும் உரிய நேரத்திலும் சம்பளம் வழங்கப்படுவதில்லை. கையுறை, முகக்கவசம் என எந்த பாதுகாப்பு வசதியும் அவர்களுக்கு இல்லை. அதிக பணிச்சுமையால் பாதிக்கப்பட்ட துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை அதிகாரிகள் சந்தித்து பிரச்னையை கேட்கவும் இல்லை. மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒரு அதிகாரியுமா இல்லை. ஒட்டு மொத்த அதிகாரிகளும் மாவட்ட அலுவலகத்திற்கு சென்று விட்டனரா? துாய்மை பணியாளர் என்பதால் அலட்சியம் காட்டுகின்றனர். தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், குப்பை கழிவுகளை கையாள திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த வேண்டும். தேவையான துாய்மை பணியாளர்களை பணியமர்த்தவேண்டும். அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களின் சுகாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.