உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருவள்ளூரில் 15ல் துவக்கம்
ஆவடி:நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்கள், அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், திருவள்ளூர் மாவட்டத்தில், வரும் 15ம் தேதி முதல் ஆக., 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில், ஆவடி மாநகராட்சியில் 12 முகாம்கள், நகராட்சிகளில் 18 முகாம்கள், பேரூராட்சிகளில் நான்கு முகாம்கள், ஊரகப்பகுதிகளில் 86 முகாம்கள் என, 120 முகாம்கள் நடைபெற உள்ளன.இன்று முதல், தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று, முகாம் குறித்து தகவல்கள், திட்டங்கள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து விவரித்து, கையேடு மற்றும் விண்ணப்பங்கள் வழங்குவர்.மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உள்ளவர்கள், இந்த முகாமில் பங்கேற்று விண்ணப்பம் அளிக்கலாம். அதற்கான விண்ணப்பங்கள், இந்த முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் 871 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.