உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 3 மாதங்களாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி

3 மாதங்களாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி

ஆவடி:ஆவடி, வள்ளுவர் தெரு சந்திப்பில் மூன்று மாதங்களாக சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஆவடி அடுத்த கோவில்பதாகை, திருமுல்லைவாயில் சாலை அருகே 6, 11, 12வது வார்டுகளை இணைக்கும் வள்ளுவர் தெரு சந்திப்பு உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், கிழக்கு மாடவீதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மூன்று மாதங்களாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இந்த சந்திப்பில் உள்ள கழிவுநீர் கால்வாய், தரைப்பாலம் பத்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது அவை, தரையில் உள்வாங்கி, கசடு மண் சேர்ந்து கழிவுநீர் சாலையில் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கிழக்கு மாட வீதியில், அமுதம் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள், மூக்கை பிடித்தபடி கழிவுநீரில் வரிசையில் காத்திருக்கும் சூழல் உள்ளது. கழிவுநீரால் பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கையில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள பழைய கால்வாயை இடித்து, புதிய கால்வாய் அமைத்து, கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ