உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தற்காலிகமாக திறக்கப்பட்ட மேம்பாலம் வழக்கமான படகு பயணத்திற்கு குட்பை

தற்காலிகமாக திறக்கப்பட்ட மேம்பாலம் வழக்கமான படகு பயணத்திற்கு குட்பை

மீஞ்சூர்: சுப்பாரெட்டிப்பாளையத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைந்ததை தொடர்ந்து, மழைக்காலங்களில் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கி, படகு பயணம் நடைபெறும் நிலையில், தற்போது விமோசனம் கிடைத்துள்ளது. மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம், வேப்பம்கொண்ட ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையின் பயனாக, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்திற்கு பதிலாக, மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்தாண்டு துவக்கப்பட்டது. நபார்டு வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ், 16.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, பல்வேறு கட்ட பணிகள் முடிந்து, இருபுறமும் இணைப்பு சாலைக்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், தொடர் மழையால் கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியது. இதனால், மேற்கண்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேம்பாலத்திற்கு தற்காலிகமாக இணைப்பு சாலை ஏற்படுத்தி, கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது கிராம மக்கள், மேம்பாலத்தின் வழியாக பயணிக்கின்றனர். வழக்கமாக, மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தரைப்பாலம் மூழ்கி, கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். அத்தியாவசிய தேவைகளுக்கு மீஞ்சூர் வந்து செல்ல, கிராம மக்கள் படகு பயணம் மேற்கொள்வர். தற்போது, தரைப்பாலத்திற்கு மாற்றாக மேம்பாலம் அமைந்ததால், படகு பயணத்திற்கு கிராம மக்கள் 'குட்பை' தெரிவித்துள்ளனர். இதனால், நீண்ட கால பிரச்னைக்கு தற்போது விமோசனம் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி