அரசு பள்ளி எதிரே சீர்கேடு சீரமைத்தால் மைதானம் தயார்
ஆர்.கே.பேட்டை:அரசு பள்ளி எதிரே உள்ள பொது தோப்பு, கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளதால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை சீரமைத்து, விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும் என, தெரிவிக்கின்றனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் இரண்டு தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் ஒட்டுமொத்தமாக, 1,500 பேர் பயின்று வருகின்றனர். இக்கிராமத்தின் கிழக்கில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியின் எதிரே, 5 ஏக்கர் பரப்பளவில் கிராம பொது தோப்பு உள்ளது. இந்த தோப்பில் மரங்கள் எதுவும் வளரவில்லை. தேங்கி நிற்கும் கழிவுநீரில், கோரைபுற்கள் மட்டுமே வளர்ந்துள்ளன. இப்பகுதியில் வசிப்போர், குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், தோப்புக்கு எதிரே உள்ள அரசு தொ டக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கொசு தொல்லையால் அவதிப்படுகின்றனர். பள்ளி வளாகம் எதிரே சுகாதார சீர்கேடு நிலவுவதால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, சீரழிந்துள்ள தோப்பை சீரமைத்து, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.