இணைப்பு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சோழவரம்: ஆத்துாரில் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, கரடு முரடாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். சோழவரம் அடுத்த ஆத்துார் கிராமத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை சேதமடைந்து உள்ளது. சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டும், ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. இதனால், சாலை பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது, அவற்றின் கீழ்பகுதி பள்ளங்களில் சிக்கி தவிப்பதுடன், உதிரிபாகங்களும் பழுதாகின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து சிறு சிறு விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். இணைப்பு சாலை சேதமடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், தேவனேரி, ஆத்துார், பழைய எருமைவெட்டிப்பாளையம், புதிய எருமைவெட்டிப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இணைப்பு சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.