அதிகத்துார் ஆற்று பாலம் நெற்களமாக மாறிய அவலம்
அதிகத்துார், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது அதிகத்துார் ஊராட்சி. இங்கு, விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில், நெல்லை உலர வைக்க நெற்களமும், நெல்லை பாதுகாக்க கொள்முதல் நிலையமும் இல்லை.இதனால் விவசாயிகள், இப்பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே, 6.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை நெற்களமாகவும், நெல் கொள்முதல் நிலையமாகவும் மாற்றியுள்ளனர். இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் நெல்லை உலர வைக்கும் போது, துாசி பறந்து வாகனங்களில் செல்வோரின் கண்களை பதம்பார்க்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, அதிகத்துாரில் நெற்களம் மற்றும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.