உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி- சித்துார் மார்க்கம் நான்கு வழி சாலையாக விரிவாக்கம்! முதற்கட்டமாக ரூ. 61 கோடியில் பணிகள் துவக்கம்

திருத்தணி- சித்துார் மார்க்கம் நான்கு வழி சாலையாக விரிவாக்கம்! முதற்கட்டமாக ரூ. 61 கோடியில் பணிகள் துவக்கம்

ஆர்.கே. பேட்டை:திருத்தணி - -சித்துார் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் தடுப்பதற்கு நெடுஞ்சாலை துறையினர் இரு வழிச்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு, 140 கோடி ரூபாய் திட்டமதிப்பீடு தயார் செய்துள்ளனர். முதற்கட்டமாக, 10 கி.மீ., துாரம் மட்டும் நான்கு வழிச்சாலை ஏற்படுத்தும் பணிகள், 61 கோடி ரூபாயில் துவங்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முதல் ஆந்திர மாநிலம், சித்துார் வரை, 65 கி.மீ. துாரம் இருவழி மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள், 40 கிலோ மீட்டர் துாரம் வருகிறது. மீதமுள்ள 25 கி.மீ., துாரம் ராணிப்பேட்டை மாவட்டம் எல்லைக்குள் வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி முதல் ஆர்.கே.பேட்டை வரை, 23 கி.மீட்டரும், ஆர்.கே.பேட்டை முதல் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான விடியங்காடு வரை, 17 கி மீட்டர் துாரம் உள்ளது. இந்த, 40 கி.மீ., துாரம் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.இந்நிலையில் திருத்தணி-- சித்துார் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். குறிப்பாக நுாற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் ஆந்திர மாநிலம், பலமநேர், கார்வேட்நகரம், சித்துார் ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறி லாரி, வேன்களும் அதிகளவில் திருத்தணி நகருக்கு தினசரி வருவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இது தவிர மாநில நெடுஞ்சாலையோரம் சிலர் ஆக்கிரமித்து கட்டடங்கள் மற்றும் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் சாலையும் குறுகலாக மாறிவருகிறது. இதனால் விபத்துக்களும் தினமும் அதிகரித்து வருகிறது. விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்கு இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு திருத்தணி, பள்ளிப்பட்டு நெடுஞ்சாலை துறையினர் தீர்மானித்து, 140 கோடி ரூபாய் திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.இதில் முதற்கட்டமாக திருத்தணி ஒன்றியத்தில், தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை, 4 கி.மீ., துாரத்திற்கு, 22 கோடி ரூபாயும், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் விடியங்காடு, அசுவரேவந்தபுரம் முதல் கோபாலபுரம் வரை, 6 கி.மீ. துாரத்திற்கு, 39 கோடி ரூபாயும், என மொத்தம், 10 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, 61 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.தலையாறிதாங்கல்- பீரகுப்பம் வரை சாலை விரிவாக்க பணிகள் கடந்த மாதமும், விடியங்காடு அசுவரேந்தபுரம்- கோபாலபுரம் சாலை விரிவாக்க பணிகள் கடந்த வாரம் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் முதற்கட்டமாக, 10 கி.மீ.,துாரம் வரை இருவழிச் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு பணிகள் துவங்கி உள்ளன. இதற்காக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே போல் சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அகற்றுவது மற்றும் மண்சாலை அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. மண்சாலை ஏற்படுத்தியவுடன் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் சிறுபாலங்கள் கட்டும் பணிகளும் துவங்கும். இப்பணிகள், ஒரு வருடத்திற்குள் முடித்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடவும் திட்டமிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Dr.V.N.Jothi
ஜன 30, 2025 19:24

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் திருத்தணி நகரருக்கு அடுத்த மக்கள் தொகை அதிகமாக உள்ள ஊர் பொதட்டூர்பேட்டை என்பது அனைவரும் அறிந்ததே அந்த ஊருக்கு இணைப்பு சாலைகள் உருவாக்கும் நிலை இருந்தாலும் நெடுஞ்சாலை சாலை துறை அவற்றை செயல்படுத்தாமல் உள்ளது. திருத்தணி-பொதட்டூர்பேட்டை-பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை SH106 பல வலைவுகளை கொண்டதாக உள்ளது பள்ளிப்பட்டு தாலுகாவை எடுத்துக்கொள்ளுங்கள் பள்ளிப்பட்டு ஆந்திராவின் ஒருபகுதியாக மாறி விட்டது அந்த வகையில் வளர்ச்சி தான் ஆனால் தமிழ் நாடு என்ற வகையில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. ஆனால் பொதட்டூர்பேட்டை எதுவுமே இல்லாத தீவாக உள்ளது. எங்கள் ஊருக்கு உள்ள ஒரே மாநில நெடுஞ்சாலை பள்ளிப்பட்டு-பொதட்டூர்பேட்டை-திருத்தணி SH106 மட்டும் ஆனால் தற்போது பெரிய சரக்கு வண்டிகள் இயக்க பயன்படுத்த முடியவில்லை. அரவாசபட்டடை ஊரில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்த அரசு ஏன் சொரக்காய்பேட்டை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டவில்லை சிந்திக்க வேண்டும். இதனால் பொதட்டூர்பேட்டை வளர்ச்சி எந்த அளவுக்கு தடைப்பட்டது என்பது கணக்கிட முடியாது. பொதட்டூர்பேட்டை நகரி இரயில் நிலையம் சாலை நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே உள்ளது. எந்தளவுக்கு நாங்கள் பின் தங்கி உள்ளோம் எனப்புரிகிறதா? நாங்கள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல எல்லா வகையிலும் பின்தங்கிய நிலையில் உள்ளோம். எங்கள் ஊர் இவ்வளவு மக்கள் தொகை இருந்தும் தாலுக்காவோ? ஒன்றியமோ? கூட இல்லை சாலை மேம்பாடும் இல்லை எந்த வித அரசு அலுவலகங்களும் இல்லை இந்த சாலை மேம்படுத்த கோரிக்கை வைக்கிறேன் 1 சொரக்காய்பேட்டை வழியாக புத்தூர் சாலை, 2 நகரி இரயில் நிலையம் சாலை, 3 மத்தூர் வழியாக திருத்தணி சாலை, 4 காக்களூர் - நொச்சிலி வழியாக திருத்தணி சாலை


சமீபத்திய செய்தி