திருத்தணி: திருத்தணி ஒன்றிய அலுவலகம் பின்புறம் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், கடந்த, 1971ம் ஆண்டு, ஜூலை 20ம் தேதி கால்நடை மருந்தகத்தை அப்போதைய தி.மு.க., அமைச்சர் க.அன்பழகன் திறந்து வைத்தார். இந்த கால்நடை மருந்தகத்திற்கு, தினமும்,100 - 150 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் செயற்கை முறை கருவூட்டல் நடைபெறுகிறது.இதுதவிர 15- - 25 செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்லப் பிராணிகளை சிகிச்சைக்கு கொண்டு வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் கருவிகளான எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தப்பரிசோதனை போன்ற பரிசோதனைகள் செய்வதற்கு போதிய கருவிகள் இல்லாததால், செல்லப்பிராணிகளை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது.இந்த கால்நடை மருந்தகத்திற்கு திருத்தணி தாலுகா மற்றும் அரக்கோணம் தாலுகா ஆகிய பகுதிகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்தாமல் அரசு அலட்சியம் காட்டுவதால் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் உயர்தர சிகிச்சை அளிக்க முடியாமல் பல கால்நடைகள் உயிரிழப்பு ஏற்பட்டு, நஷ்டம் அடைகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம், கால்நடை துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று திருத்தணி கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் அம்பத்துார் ஆகிய நான்கு வருவாய் கோட்டங்களில் கால்நடை உதவி இயக்குனர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.திருத்தணி வருவாய் கோட்டத்தில் மட்டும் இதுவரை கால்நடை மருத்துவமனை இல்லை. திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ஆகிய கோட்டத்தில், தலா இரண்டு மருத்துவமனையும், அம்பத்துார் கோட்டத்தில் ஒரு மருத்துவமனை என மாவட்டத்தில், ஐந்து மருத்துவமனைகள் உள்ளன. திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பரிந்துரை கடிதம், எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர், துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் மூலம் கடிதம் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை இல்லை. பண்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தினால், விவசாயிகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.