பொன்னேரி : மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு அருகில் வேகத்தடை
அமைக்கப்பட்டும், அதற்கு முறையான அறிவிப்புப் பலகை வைக்கப்படாததால், வாகன
ஓட்டிகள் விபத்து அபாயத்தில் உள்ளனர்.பொன்னேரி - பழவேற்காடு சாலையில்,
மெதூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு மெதூர், ஆவூர்,
பாரதிநகர், வேம்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து, 500க்கும்
மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகம் மாநில
நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. திருப்பாலைவனம், அண்ணாமலைச்சேரி மற்றும்
பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது.
பொன்னேரி - பழவேற்காடு சாலையில், வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து
வருகிறது.நெரிசல் இல்லாத, புதிதாக போடப்பட்ட சாலையாகவும்
இருப்பதால்,பழவேற்காடு மற்றும் பொன்னேரி செல்லும் வாகனங்கள், அசுர
வேகத்தில் செல்கின்றன. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாலையைக்
கடக்கும்போது விபத்து உண்டாகி, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.மேற்கொண்டு
விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க, பள்ளிக்கு அருகில்
வேகத்தடைகள் அமைக்க பள்ளி நிர்வாகமும், ஊர் பொதுமக்களும், பொன்னேரி
நெடுஞ்சாலைத் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.அதைத் தொடர்ந்து,
பொன்னேரி பழவேற்காடு நெடுஞ்சாலையில் பள்ளியின் நுழைவாயிலுக்கு இருபுறமும்,
வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. பள்ளி நிர்வாகமும், மாணவர்களின் பெற்றோர்களும்
நிம்மதியடைந்தனர்.ஆனால், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடை குறித்து
நெடுஞ்சாலைத் துறையினர் எவ்வித அறிவிப்புப் பலகையும் வைக்கவில்லை. இதனால்,
வேகத்தடை இருப்பது தெரியாமல் செல்லும் வாகன ஓட்டிகள், திடீர், 'பிரேக்'
போட்டு நிலைதடுமாறுகின்றனர்.இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன
ஓட்டிகள், பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விபத்து அபாயத்தில் உள்ள
வேகத்தடைகளில், ஒளிரும் ரிப்ளக்டர்கள் பதிக்கவும், குறிப்பிட்ட இடைவெளிக்கு
முன் வேகத்தடை இருப்பது குறித்து அறிவிப்புப் பலகையும் வைக்க வேண்டும் என,
வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து நெடுஞ்சாலைத் துறை
அதிகாரி ஒருவர் கூறிய போது, ''பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்
கொண்டதற்கு இணங்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த
பிறகு, பள்ளி அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டது.டிவிஷனில் அதிகாரிகளின்
ஒப்புதல் பெற்று எங்கெல்லாம் அறிவிப்புப் பலகைகள் தேவைப்படுகின்றன என்று
கணக்கெடுத்து, அங்கு அறிவிப்புப் பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்''
என்றார்