உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செங்கல் சூளை: பயிற்சியளிக்க திருநங்கைகள் கோரிக்கை

செங்கல் சூளை: பயிற்சியளிக்க திருநங்கைகள் கோரிக்கை

திருவள்ளூர் : செங்கள் சூளை அமைக்க பயிற்சியும், சூப்பர் மார்க்கெட் அமைக்க மூலதனமும் அளிக்க வேண்டும் என, திருநங்கைகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னேரி தாலுகா, சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கையர் சுயஉதவிக் குழு மற்றும் எவரெஸ்ட் திருநங்கையர் சுயஉதவிக் குழு சார்பில், நேற்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதில், 'எங்களுடைய வாழ்க்கைத் தரம் உயர நாங்கள் சுயதொழில் செய்து முன்னேற திட்டமிட்டுள்ளோம். இதற்காக, செங்கல் சூளை அமைக்கவும், சூப்பர் மார்க்கெட் அமைக்கவும் தீர்மானித்துள்ளோம்.எனவே, செங்கல் சூளை அமைக்க உரிய பயிற்சியும், சூப்பர் மார்க்கெட் அமைக்க மூலதனத்தையும் அளிக்க வேண்டும்' என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.வீட்டுமனைப் பட்டா: திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமம், நரிக்குறவர் காலனியில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு குடும்ப அட்டை, ஓட்டுரிமை ஆகியவை உள்ளது. இந்நிலையில், அரசின் தொகுப்பு வீடு கிடைக்க இவர்களுக்கு பட்டா தேவைப்படுகிறது. எனவே, தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி, இவர்கள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.சுடுகாடு: திருவள்ளூர் மாவட்டம் ஆரிக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில், எத்திராஜ் என்பவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், 'எங்கள் பகுதியைச் சுற்றி லட்சுமி நகர், கங்கா நகர், பவானி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் இறந்துவிட்டால், நாங்கள் ஆரிக்கம்பேடு கண்டிகையில் உள்ள மயானத்தில் எரித்தும், புதைத்தும் வந்தோம். சமீபகாலமாக, ஊர்மக்கள் என்றும், பிளாட் வாழ் குடிமக்கள் என்றும் பிரிக்கப்பட்டது.இதையடுத்து, எங்கள் பகுதியில் யாராவது இறந்தால் அவர்களை புதைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் எங்கள் பகுதியைச் சேர்ந்த இறந்த ஒருவரது உடலை கண்டிகையில் உள்ள சுடுகாட்டில் புதைக்க சென்ற போது, ஊர் மக்கள் எங்களை தடுத்தனர்.இதனால், நாங்கள் சுமார் 45 நிமிடங்கள் பிணத்துடன் ரோட்டில் நின்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், கலவரம் ஏற்படும் அபாய சூழ்நிலையும் ஏற்பட்டது. எனவே, எங்களுக்கு தனியாக ஒரு சுடுகாடு அமைத்து தர வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை