உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி நேரத்திற்கு வராத 3 அரசு பஸ்கள் உட்பட 5 பஸ்களை மாணவர்கள் சிறை பிடிப்பு

பள்ளி நேரத்திற்கு வராத 3 அரசு பஸ்கள் உட்பட 5 பஸ்களை மாணவர்கள் சிறை பிடிப்பு

திருத்தணி : பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்திற்கு சரியான முறையில் இயங்காத மூன்று அரசு பஸ்கள் உட்பட 5 பஸ்களை, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றரை மணி நேரம் சிறைபிடித்து மறியல் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருத்தணி - நாகலாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இக்கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், திருத்தணி நகருக்கு வந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில், திருத்தணி பஸ் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு பஸ் புறப்பட்டு வேலஞ்சேரி, தாழவேடு, என்.என்.கண்டிகை வழியாக சிவாடாவுக்கு காலை 8 மணிக்கு செல்கிறது. அங்கிருந்து புறப்பட்டு காலை 9மணிக்கு, திருத்தணிக்கு சென்றடைகிறது. இந்த பஸ்சில் தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். ஆனால் டி7 என்ற அரசு பஸ் தினமும் சரியாக வருவதில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் தடம் எண். டி7 பஸ், காலை 7மணிக்கு திருத்தணியில் புறப்பட்டு சிவாடாவுக்கு சென்றது. அங்கிருந்து காலை 8.30மணியளவில் தாழவேடு காலனி கிராமத்திற்கு வந்த போது, மாணவர்களை பார்த்தும் பஸ் டிரைவர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர், அரசு பஸ்சை சிறைபிடித்தனர். மேலும் அதன் பின்னால் வந்த தடம் எண்.97 எஸ், 127 மற்றும் இரண்டு தனியார் பஸ்கள் என, ஐந்து பஸ்களையும் சிறைபிடித்தனர். இது குறித்து தகவலறிந்ததும், திருத்தணி தாசில்தார் ஜெயா, டி.எஸ்.பி., மாணிக்கம், இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சமரசம் செய்தனர்.அப்போது பொதுமக்கள், எங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் டி7 பஸ், மாதத்திற்கு பத்து நாட்கள் வருவதில்லை. இந்த பஸ்சில் தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் செல்கின்றனர். மேலும் இவ்வழியாக இயக்கப்படும் 97 எஸ், 127 ஆகிய இரு அரசு பஸ்களும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே தங்கிவிடுகின்றனர். பஸ்களை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டுமென போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனம் காட்டி வருகின்றனர் என புகார் தெரிவித்தனர்.இனி வரும் காலங்களில், சரியான நேரத்திற்கு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என அதிகாரிகள் உறுதி கூறியவுடன், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் காலை 8.30 மணி முதல் 10.30 வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை