சாலையோரம் முள்செடிகள் வாகன ஓட்டிகள் சிரமம்
பொன்னேரி:கோளூர் - குடிநெல்வாயல் சாலையோரத்தில் வளர்ந்துள்ள முள்செடிகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில் இருந்து, பெரியகரும்பூர் வழியாக குடிநெல்வாயல் செல்லும் சாலையின் இருபுறமும் முள்செடிகள் வளர்ந்துள்ளன.முள்செடிகள் சாலை வரை நீண்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் மீது முள்செடி பட்டு சிராய்ப்புகள் ஏற்படுவதுடன் தடுமாற்றத்திற்கும் ஆளாகின்றனர்.ஒரு சிலர் முள்செடிகளை தவிர்க்க, சாலையின் வலதுபுறமாக பயணிக்கும்போது எதிரில் வரும் வாகனங்கள் தடுமாற்றம் அடைகின்றன.எனவே, முள்செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.