திருத்தணி : வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் இருந்தும், விவசாயிகள்
பயன்படுத்தப்படாததால் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக அது மாறியுள்ளது.
இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, மூன்று கட்டடங்கள் வீணாக
சேதம் அடையும் அபாய நிலை உருவாகியுள்ளது.திருத்தணி அரசு போக்குவரத்து
பணிமனை பின்புறம், காஞ்சிபுரம் வேளாண்மை விற்பனை துறையின் கீழ், திருத்தணி
ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. திருத்தணி, திருவாலங்காடு ஆகிய
ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள், தாங்கள் பயிரிட்ட நெல், கேழ்வரகு,
வேர்க்கடலை, எள்ளு,வெல்லம், கம்பு, புளி, தேங்காய், ஆமணக்கு, பஞ்சு,
முந்திரி, திணைவரகு, கொள்ளு மற்றும் வெங்காயம் போன்றவைகளை இந்த குடோனில்
பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.மேலும், இங்கு தானியங்களை உலர்த்துவதற்காக
நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது. தானியங்களை பாதுகாப்பதற்கு மூன்று கூடம்
உள்ளது. இங்கு வைக்கப்படும் தானிய வகைகளை நல்ல விலைக்கு ஏலம் போகும் போது
விவசாயிகள் விற்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம். தானிய மூட்டைகள் வைப்பதற்கு
விவசாயிகளிடம் பணம் வசூலிப்பது இல்லை. இந்த வேளாண்மை ஒழுங்கு விற்பனை
கூடம், 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக
விவசாயிகள் இக்கூடத்தை பயன்படுத்துவது இல்லை. இங்கு தானியங்களை ஏலம்
விடுவதும் இல்லை. வியாபாரிகள் தானியங்களை வாங்குவதற்கும் இங்கு வருவதில்லை.
தற்போது இந்த விற்பனை கூடம் பூட்டியே கிடக்கிறது. இதை பயன்படுத்திக்
கொண்டு, சில சமூக விரோதிகளின் விற்பனை கூடம் வளாகத்தில் சிலர், பகல்
நேரத்தில் சீட்டாட்டம், சரக்கு அடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள்
நடக்கின்றன.இதனால், அந்த ஒழுங்குமுறை கூடம் அருகே வசிக்கும் சேகர்வர்மா நகர், காமராஜர்
நகர் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.இது குறித்து, வேளாண்மை விற்பனை
ஒழுங்கு கூட அதிகாரி ஒருவர் கூறும் போது, ''விவசாயிகள் பயிரிட்ட தானியங்களை
இந்த விற்பனை கூடத்தில் வைத்து, போட்டியின் மூலம் விலை நிர்ணயம் செய்து,
அதிக விலைக்கு விற்றுக் கொள்ளலாம். விற்பனை கூடத்தில் வைத்திருக்கும் தானிய
வகைகளுக்கு விவசாயிகள் நஷ்டம் ஏற்படாத வகையில், பொருளீட்டு கடன் ஒரு
லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.இதற்கு, 5 சதவீதம் வட்டி
வசூலிக்கப்படுகிறது. தானியங்கள் நீண்ட நாட்கள் விற்கவில்லை என்றால், 50
சதவீதம் வரை முன்பணம் வழங்கப்படுகிறது. ஆனால், விவசாயிகள் இங்கு யாரும்
வருவதில்லை. தற்போது, விவசாயிகளுக்கு தனியார் வியாபாரிகள் பயிர் செய்வதற்கு
முன்பணம் கொடுத்து வருவதால் தானியங்களை இங்கு கொண்டு வராமல் அவர்களுக்கே
விற்று விடுகின்றனர். இந்த கூடத்தில் விவசாயிகள் இலவசமாக, 4 மாதம் வரை
தானியங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். விவசாயிகள் யாரும் இங்கே வராததால் தான்
மூன்று ஒழுங்கு முறை கூடங்களும் பூட்டி வைக்க வேண்டிய சூழ்நிலை
உருவாகியுள்ளது,'' என்றார்.பி.நாராயணன்