திருத்தணி : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், நாட்டின்
வளர்ச்சிக்காகவும் முதல்வர் ஜெயலலிதா பாடுபடுகிறார் என, அரசு பல்துறை பணி
விளக்க கண்காட்சியை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி கைத்தறி
மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ரமணா கூறினார்.திருத்தணி தணிகேசன் திருமண
மண்டபத்தில், அரசு பல்துறை பணி விளக்க மூன்று நாள் கண்காட்சி நேற்று
துவங்கியது. கண்காட்சிக்கு, திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி தலைமை
வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் அருண்சுப்பிரமணியம், மணிமாறன், ஒன்றிய சேர்மன்
ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் அமைச்சர் ரமணா பேசும் போது,
''முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை, படிப்படியாக
நிறைவேற்றி வருகிறார். முதியோர், ஊனமுற்றோர் என, 9 வகையான உதவித்தொகை
பெறுபவர்கள், 500 ரூபாய் மட்டுமே பெற்று வந்தனர். அது ஆயிரம் ரூபாயாக
உயர்த்தப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 70 ஆயிரத்து 711
பேருக்கு, ஏழு கோடியே 71 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் உதவித்தொகை
வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில், 4 லட்சத்து 41 ஆயிரத்து 976
ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 10 ஆயிரத்து 120 மெட்ரிக் டன் அரிசி இலவசமாக
வழங்கப்படுகிறது. மீனவர்களுக்கு, மீன்பிடித் தடை காலத்தில்
வாழ்வாதாரத்திற்கு, முந்தைய அரசு, 1,000 ரூபாய் தந்தது. அதை, 2, 000
ரூபாயாக உயர்த்தி மாவட்டத்தில், 8 ஆயிரத்து 175 பேருக்கு ஒரு கோடியே, 63
லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது' என்றார்.விழாவில், வேளாண்மை
துறை சார்பில், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விதை 'கிட்டு' க்கள் நான்கு
விவசாயிகளுக்கும், சமூக நலத்துறை சார்பில் இரு பெண் குழந்தை பாதுகாப்புத்
திட்டத்தின் கீழ், 21 பெண்களுக்கு, 31 லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாயும்,
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவி குழுக்கள்
கூட்டமைப்பின், ஏழு குழுக்களுக்கு, தலா 1 லட்ச ரூபாய் வீதம்
ஊக்கத்தொகையையும், வருவாய் துறை சார்பில் மாதம், 1,000 ரூபாய்க்கான உதவித்
தொகை (முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவை) 15 பேருக்கும் அமைச்சர் ரமணா
வழங்கினார்.