புறக்காவல் நிலையம் இல்லாததால் அச்சத்தில் தவிக்கும் ரயில் பயணியர்
திருத்தணி,:திருத்தணி ரயில் நிலையத்திற்கு திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பயணியர் வருகின்றனர். இங்கிருந்து சென்னை, திருப்பதி மார்க்கமாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இதனால், அதிகாலை 3:00 மணி முதல் நள்ளிரவு 11:30 மணி வரை, ரயில் நிலையத்தில் எப்போதும் நுாற்றுக்கணக்கான பயணியர் ரயிலில் பயணம் செய்வதற்காக காத்திருப்பர். ஆனால், பயணியருக்கு போதிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை.ரயில் நிலையத்தில் காவல் மையமோ, புறக்காவல் மையமோ இதுவரை ஏற்படுத்தவில்லை. ரயில் பயணியர் தங்களது உடைமைகள், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை தவறவிட்டால், அதை கண்டுபிடித்து தருவதற்கு, 15 கி.மீ., துாரமுள்ள அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பில் இயங்கி வரும் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும்.இந்த நிலையத்தில், ரயில்வே போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபடுவதில்லை. இதனால், ரயில் நிலையத்தில் தங்கும் பயணியர் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, திருத்தணி ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும், ரயில் நிலையத்தில், 24 மணி நேரமும் நடைமேடைகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.