மேலும் செய்திகள்
மரங்களை சேதப்படுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர்
19-Jul-2025
திருவாலங்காடு ' சின்னம்மாபேட்டை ஓடை புறம்போக்கு நிலத்தில் இருந்து 70 ஈச்ச மரங்களை மூன்று மாதத்தில் வேருடன் அகற்றி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களுக்கு கடத்தியிருப்பதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை அருகே உருவாகும் ஓடை நீர், பழையனுார் வழியாக நாராயணபுரம் அருகே உள்ள கொசஸ்தலையாற்றில் கலக்கிறது. இதன் நீளம் 14 கி.மீ., இந்த ஓடைக்கால்வாய் சின்னம்மாபேட்டையில் மட்டும், 3 கி.மீ., நீளமும், 10 - 40 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. இதை ஒட்டிய அரசு புறம்போக்கு நிலத்தில், 600க்கும் மேற்பட்ட ஈச்ச மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றில் 5 - 30 ஆண்டு மரங்கள், 80 சதவீதம் உள்ளன. இங்கு காய்க்கும் ஈச்சம் பழத்திற்கு, திருவாலங்காடு பகுதியில் மவுசு அதிகம். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வருவோர் ஈச்சம் பழத்தை பறித்து விற்பனை செய்கின்றனர். சிலர், ஈச்ச ஓலையில் கூடை பின்னியும், கீற்றில் துடைப்பம் தயாரித்தும் விற்பனை செய்கின்றனர். மரங்கள் மாயம் மூன்று மாதங்களாக சின்னம்மாபேட்டை ஓடை கால்வாய் பகுதியில், 20 - 30 ஆண்டுகளாக நன்கு வளர்ந்த 70 மரங்கள் மாயமாகியுள்ளன. இவை, சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஸ்டார் ஹோட்டல்கள், பெரிய நிறுவன வளாகங்களில், அழகுக்காக வைக்க கடத்தி செல்வதாக கூறப்படுகிறது. ஈச்ச மரங்களை கடத்தி செல்ல வருவோர், கிராமங்களில் உள்ள இளைஞர்களை அழைத்து, அவர்களிடம் ஒரு மரத்தை எங்களுக்கு வேருடன் அகற்றி, கன்டெய்னர் லாரியில் ஏற்றி தந்தால், 30,000 - 35,000 ரூபாய் தருவதாக கூறுகின்றனர். இளைஞர்கள் பேரத்திற்கு படிந்ததும், 10க்கும் மேற்பட்டவர்கள் குழுவாக இணைந்து, ஈச்சம் ஓலைகளை அகற்றிவிட்டு, கடப்பாரை உதவியுடன் மரத்தை தோண்டி எடுத்து, பொக்லைன் இயந்திரங்கள் உதவியால் வேருடன் கன்டெய்னர் லாரியில் ஏற்றி அனுப்புகின்றனர். ஆர்வலர்கள் குமுறல் மூன்று மாதமாக தொடர்ந்து ஈச்ச மரங்கள் வணிக நோக்கத்திற்காக சூறையாடப்படுவதும், நீர் மேலாண்மைக்கு முக்கியமாக திகழும் ஈச்ச மரங்கள் பறிப்போவதும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர். ஈச்ச மரங்கள் கடத்தப்படுவது குறித்து ஊராட்சி, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்காமல், மூன்று மாதங்களாக அலட்சியம் காட்டுவது சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து, கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு மரம் கூட மிஞ்சாது! பனை மற்றும் புளியமரங்களை வெட்டி விற்பனை செய்து வந்த சமூக விரோதிகள், தற்போது பணத்திற்காக ஈச்ச மரத்தை சூறையாடி வருவது வேதனை அளிக்கிறது. ஓடை பகுதியில் பனை, ஈச்ச மரங்கள் என, 10,000 மரங்கள் இருந்தன. தற்போது, 5,000 மரங்கள் கூட இல்லை. அதிகாரிகள் இனியும் கண்டுகொள்ளாவிட்டால், ஒரு மரம் கூட மிஞ்சாது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சமூக ஆர்வலர்கள், சின்னம்மாபேட்டை.காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் கால்வாய் புறம்போக்கு உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவை உண்மை என்றால், மரங்களை அகற்றிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் துறை அதிகாரிகள் வாயிலாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். - வருவாய் துறை அதிகாரி, திருத்தணி.
19-Jul-2025