மேலும் செய்திகள்
சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி
05-Nov-2025
திருத்தணி: 'தாட்கோ' மூலம் மானிய விலையில் டிராக்டர்கள் வாங்கிய பழங்குடியினருக்கு, இரண்டு ஆண்டுகளாகியும் மானிய தொகை கிடைக்காததால், வங்கிகளில் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். தாட்கோ அதிகாரிகள், மானியம் வழங்குவதற்கு முன்பே டிராக்டர்கள் வாங்கியவர்களுக்கு மானிய தொகை வழங்க முடியாது எனக் கூறுவதால் தவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், 'தாட்கோ' மூலம், 2023 - 24ம் ஆண்டின் கீழ், மானிய விலையில் டிராக்டர்கள் வழங்கப்படும் என அறிவித்தது. இதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் முழுதும், 150 பழங்குடியினர் மானிய விலையில் டிராக்டர் வாங்குவதற்கு தீர்மானித்து, 'தாட்கோ' அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். கடந்த 2023 நவம்பர் - டிசம்பர் மாதம் விண்ணப்பித்தவர்களிடம், தாட்கோ அதிகாரிகள் 'மானிய விலையில் டிராக்டர் வாங்கிக் கொள்ளலாம்' என, உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து, பழங்குடியினர் வங்கிகளில் கடனுதவி பெற்று, தனியார் விற்பனை முகவர்களிடம் இருந்து டிராக்டர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இரு ஆண்டுகளாகியும் இதுவரை மானிய தொகை வழங்காமல் தாட்கோ காலதாமதம் செய்வதால், பழங்குடியின மக்கள் வங்கி கடன் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். திருத்தணி வருவாய் கோட்டத்தில், 42 பழங்குடியினர் மானிய விலையில் டிராக்டர் வாங்கியும், மானிய தொகை விடுவிக்காததால், வங்கி கடன் மற்றும் தனியார் டிராக்டர் விற்பனை முகவரிடம் பதில் சொல்ல முடியாமல் திணறி வருகின்றனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் கூறியதாவது: 'தாட்கோ' நிர்வாகம் மூலம், 2022 - 23ம் ஆண்டின் கீழ், ஒரு டிராக்டருக்கு, 3.80 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவித்தது. இதை நம்பி, நாங்கள் தனியார் விற்பனை நிலைய முகவரிடம், 6 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்து, வங்கி கடன் பெற்று டிராக்டர்கள் வாங்கினோம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை, 47,000 ரூபாய் வீதம், 12 தவணைகளுக்கு, 5.64 லட்சம் ரூபாயை வங்கிக்கு கடனாக செலுத்த வேண்டும். ஆனால், இரு ஆண்டுகளாகியும் மானிய தொகை வழங்காமல், தாட்கோ அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். வங்கி அதிகாரிகள், வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, தாட்கோ மானிய தொகையை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட தாட்கோ அதிகாரி கூறியதாவது: டிராக்டர் வாங்கும் விலையில், 25 சதவீதம் பழங்குடியின மக்களுக்கு மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானிய தொகை பயனாளிகளுக்கு வழங்கிய பின் தான், வங்கிகள் மூலம் கடனுதவி பெறுவது அல்லது தனியார் டிராக்டர் விற்பனை முகவரிடம் இருந்து, கடனில் டிராக்டர் வாங்குதல் போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தவிர்த்து, மானிய தொகை வழங்கும் முன்பே, டிராக்டர்கள் வாங்கிய பழங்குடியினருக்கு மானியம் வழங்க முடியாது. 'தாட்கோ' மூலம் மானியம் என அறிந்தவுடன், தனியார் டிராக்டர் விற்பனை நிலைய முகவர்கள், 'எப்படியும் உங்களுக்கு மானிய தொகை வந்துவிடும். 'எனவே, நீங்கள் வங்கிகள் மூலம் கடனுதவி பெறுங்கள்' என, பழங்குடியின மக்களிடம் தெரிவிக்கின்றனர். சில வங்கி அதிகாரிகளும், அரசு மானியம் வந்துவிடும் என்ற நோக்கத்தில், எளிதாக கடனுதவி வழங்குகின்றனர். இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. இவ்வாறு அவர் கூறினார். விதிமுறைகளை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை பழங்குடியின மக்களுக்கு மானிய விலையில் டிராக்டர்கள் வழங்கப்படும் என, தாட்கோ நிறுவனம் அறிவித்ததால், தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பித்தேன். அவர்களும், 'உங்களுக்கு மானியம் கிடைக்கும்' எனக் கூறியதால், அதை நம்பி, வங்கியில் கடன் பெற்று, திருத்தணியில் உள்ள விற்பனை நிலைய முகவரிடம் டிராக்டர் வாங்கினேன். ஆனால், இரு ஆண்டாகியும் மானிய தொகை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக, தாட்கோ அதிகாரிகளிடம் கேட்ட போது, நீங்கள் மானிய தொகை விடுவிக்கும் முன்பே டிராக்டர் வாங்கியதால், மானியம் வழங்க முடியாது எனக் கூறுகின்றனர். தாட்கோ அதிகாரிகள், முன்கூட்டியே விதிமுறைகளை விளக்கி கூறியிருந்தால், மானியம் வந்த பின், வங்கியில் கடன் பெற்று, டிராக்டர் வாங்கி இருப்போம். - எம்.பெருமாள், ராமகிருஷ்ணாபுரம்.
05-Nov-2025