தனியார் பஸ் டிரைவரை தாக்கி பணம் பறித்த இருவர் கைது
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், 39. இருங்காட்டுகோட்டையில் ஷிவான் நிவாஸ் என்னும் தனியார் தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 16ம் தேதி இரவு காக்களூர் பகுதியில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் பாண்டியனை தாக்கி, அவரிடம் இருந்த, 2,000 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து, பாண்டியன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காக்களூர் பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர், 31, மாரிதாசன், 23, தனுஷ், 21, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று முன்தினம் மாலை மணவாளநகர் பகுதியில் சுற்றித்திரிந்த, அம்பேத்கர், மாரிதாசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தனுஷ் என்பரை தேடிவருகின்றனர்.