புழல்:பாடி மேம்பாலம், பிரபல துணிக்கடை அருகே, கடந்த 20ம் தேதி, சந்தேகப்படும்படி நின்ற ஆறு பேரிடம், புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.விசாரணையில், 'ஆன்லைன்' வழியாக ஆர்டர் பெற்று, போதைப்பொருள் விற்பனை செய்வது தெரிய வந்தது.இதையடுத்து, வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணி பெண் எஸ்.ஐ.,யின் கணவர் குமரவேல், 46, உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து, 3 கிராம் மெத் ஆம் பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்து, ஆறு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின், தனிப்படை போலீசார் ரோந்து பணியில் பாடி அருகே சுற்றித்திரிந்த இருவரை, நேற்று முன்தினம் பிடித்தனர்.விசாரணையில், தஞ்சாவூர், ராமலிங்கபுரம் ரெட்டி பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், 41, மற்றும் பெங்களூரு எலகங்கா நியூ டவுனைச் சேர்ந்த கோவர்தனன் ரெட்டி, 39, ஆகியோர் என தெரிந்தது.அவர்கள், சென்னையில் உள்ள கல்லுாரி மாணவர்களை குறிவைத்து மெத் ஆம் பெட்டமைன் விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 64 கிராம் மெத் ஆம் பெட்டமைன், 6 லட்சம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நேற்று சிறையில் அடைத்தனர்.