முதியவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய இருவர் கைது பணத்தை திருப்பி கேட்டதால் வெறி
திருத்தணி, வீட்டுமனை வாங்குவதற்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட முதியவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி, கே.கே.நகரைச் சேர்ந்தவர் சங்கீதா, 42. இவரது தந்தை குணசீலன், 66. சங்கீதா புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டுமான பணிகளை கவனித்து வந்தார். கடந்த ஜூன் 20ல், குணசீலன், வீட்டின் கட்டுமான பணிகளுக்கான பொருட்களை வாங்க, ஆந்திர மாநிலம் நகரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல்போனிற்கு சங்கீதா தொடர்பு கொண்ட போது, நகரி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், 33, என்பவர், 'உன் தந்தை மதுரை சென்றுள்ளார். வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும்' எனக் கூறியுள்ளார். மீண்டும் தொடர்பு கொண்ட போது, 'மொபைல்போன் சுவிட்ச் ஆப்'ஆகி இருந்தது. சந்தேகமடைந்த சங்கீதா, திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் நகரியைச் சேர்ந்த அய்யப்பனிடம் விசாரித்தனர். இதில் தெரிய வந்ததாவது: அய்யப்பன் மற்றும் அவரது நண்பர் கங்காதரன், 57, ஆகியோர், குணசீலனிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி, ஆறு மாதங்களுக்கு முன், 15 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால், வீட்டுமனை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்தனர். குண சீலன் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், கடந்த ஜூன் 20ம் தேதி பணம் தருவதாக கூறி குணசீலனை வரவழைத்து, ஆந்திராவிற்கு கடத்தி சென்று கொலை செய்துள்ளனர். உடலை துண்டு துண்டாக வெட்டி, நகரி தேசம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் வீசியது தெரிந்தது. அய்யப்பன் மற்றும் கங்காதரனை கைது செய்த திருத்தணி போலீசார், நகரி போலீசார் உதவியுடன் குளத்தில் இருந்து கை, கால், தலை உள்ளிட்ட குணசீலனின் உடல் பாகங்களை மீட்டனர்.